மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

காசி தமிழ்ச் சங்கமத்தின் ஒரு பகுதியாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக மைய நூலகத்தில் அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சி

Posted On: 05 DEC 2022 4:12PM by PIB Chennai

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக மைய நூலகத்தில் அரிய தமிழ் நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் கண்காட்சியை பாரதிய பாஷா சமிதியின் தலைவரும் காசி தமிழ்ச் சங்கமத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான பத்மஸ்ரீ சாமு கிருஷ்ணசாஸ்திரி அவர்கள் காலை 11:00 மணிக்கு தொடங்கிவைத்தார். நிகழ்வின்போது செம்மொழி மத்தியத் தமிழாய்வு நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் இரா. சந்திரசேகரனும் பல்கலைக்கழக நூலகர் முனைவர் தேவேந்திர குமார் சிங் அவர்களும் உடனிருந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கத்தின் ஒரு பகுதியாகப் சயாஜி ராவ் கெய்க்வாட் மைய நூலகத்தின் சார்பில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய நூலகத்தில் 1890கள் தொடங்கி வெளிவந்த பல்வேறு தமிழ் நூல்கள் மற்றும் 17, 18ஆம் நூற்றாண்டுகளில் தமிழ் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட 12 ஓலைச்சுவடிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தொடக்கக்கால தமிழ் நாடகங்களின் முதல் பிரதிகள், அன்னி பெசன்ட் அவர்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்பெற்ற நூல்கள், தமிழ் இசை நுட்பங்களை விளக்கும் யாழ் நூல், குமரகுருபரரின் நூல்கள், சைவ சிந்தாந்த தத்துவ ஏடுகள், பாரதி நூல்கள், ராமாயண, மகாபாரத மொழிபெயர்ப்புகள் முதலியவை அடங்கும்.

கண்காட்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய கிருஷ்ணசாஸ்திரி, இந்த பழமையான அரிய ஆவணங்கள் பல்கலைக்கழக நூலகத்தில் முறையாக பாதுகாக்கப்பட்டு இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அதேசமயம் இந்த ஆவணங்கள் சரியாக வகைப்படுத்தப்பட்டு ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் முறைப்படுத்தப்பட வேண்டும் என்றார். இதுவே இன்றையத் தேவை என்றும் வலியுறுத்தினார்.

இந்த விலைமதிப்பற்ற சேகரிப்புகளின் கண்காட்சி, மத்திய நூலகத்தின் மைய மண்டபத்திற்கு அருகில் கையெழுத்துப் பிரதிகள் மற்றும் அரிய ஆவணங்கள் பிரிவில் டிசம்பர் 5 முதல் 16 வரை 12 நாட்களுக்கு தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 07:00 மணி வரை நடைபெறும். காசி தமிழ்ச் சங்கமத்திற்கு வருகை தரும் ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கியத்தில் ஆர்வமுள்ள அனைவரும் கண்காட்சியை பார்வையிடலாம் என துணை நூலகர் டாக்டர் சுசித்தா சிங் தெரிவித்துள்ளார். துணை நூலகர் முனைவர் ஆர்.பரமேஸ்வரன் மற்றும் தமிழ்த் துறையின் இரு உதவிப் பேராசிரியர்களான முனைவர் .ஜெகதீசன், முனைவர் சு. விக்னேஷ் ஆனந்த், தமிழ் ஆய்வு மாணவர்கள், ஆர்வலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

 

**************



(Release ID: 1880985) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi , Telugu