சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

“மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொருவருக்கும் அதிகாரமளிக்கும் திறவுகோல் கல்வி” - திரௌபதி முர்மு

Posted On: 03 DEC 2022 5:15PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் ஏற்பாடு செய்த "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை" கொண்டாடும் விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்கள், நிறுவனங்கள், அமைப்புகள்,  மாநில/மாவட்ட நிர்வாகங்கள் போன்றவற்றின் சிறந்த சாதனைகள் ஆகியவற்றுக்கான  தேசிய விருதுகளை அவர் வழங்கினார். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர்கள் திரு ராம்தாஸ் அத்வாலே, திருமதி பிரதிமா பௌமிக் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கான தேசிய விருதுகள் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் , ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி உலகில் ஒரு பில்லியனுக்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். அதாவது உலகில் உள்ள ஒவ்வொரு 8வது நபரும் ஏதோ ஒரு வகையில் ஊனமுற்றவர்கள். இந்திய மக்கள் தொகையில் இரண்டு சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள். எனவே, மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாக கண்ணியமான வாழ்க்கையை நடத்துவதை உறுதி செய்வது நம் அனைவரின் பொறுப்பாகும். அவர்கள் நல்ல கல்வியைப் பெறுவதையும், அவர்களின் வீடுகளிலும் சமூகத்திலும் பாதுகாப்பாக இருப்பதையும், அவர்களின் தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், சமமான வேலை வாய்ப்புகளைப் பெறுவதையும் உறுதி செய்வதும் நமது கடமையாகும் என்று கூறினார்.

இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தில், அறிவைப் பெறுவதற்கும், சிறந்து விளங்குவதற்கும் உடல் குறைபாடு  ஒரு தடையாக ஒருபோதும் கருதப்படவில்லை என்று குடியரசுத் தலைவர்  கூறினார். பெரும்பாலும், மாற்றுத்திறனாளிகள் தெய்வீகக் குணங்களைக் கொண்டவராக இருப்பதைக் காணலாம். நமது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அசாத்திய துணிச்சல், திறமை மற்றும் உறுதியின் பலத்தால் பல துறைகளில் பிரமிக்க வைக்கும் சாதனைகளை நிகழ்த்தியதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. போதுமான வாய்ப்புகள் மற்றும் சரியான சூழலைக் கொடுத்தால், அவர்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என அவர் கூறினார்.

மாற்றுத்திறனாளிகள் உட்பட ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கைக்கு  கல்வி முக்கியமானது என அவர் தெரிவித்தார். கல்வியில் மொழி தொடர்பான தடைகளை நீக்குவதற்கும், குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு கல்வியை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கும் தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தரமான கல்விக்கான சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயல்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் தேசியக் கல்விக் கொள்கை 2020 அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான 1 முதல் 6 ஆம் வகுப்புகளுக்கான என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை இந்திய சைகை மொழியாக மாற்றியதை அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களை பிரதான கல்விச் செயல்பாட்டில் சேர்ப்பது ஒரு முக்கியமான முயற்சி என்று அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் பேசுகையில், பிரதமர் தேசிய வளர்ச்சி நிகழ்ச்சி நிரலில் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைவரின் மேம்பாடு மற்றும் அனைவரின் நம்பிக்கை என்பதே அவரது குறிக்கோள். 19.04.2017 முதல் நடைமுறைக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச் சட்டம், 2016ஐ அரசு இயற்றியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைகளில் 4% இடஒதுக்கீடு வழங்க சட்டம் வழிவகை செய்கிறது என்று கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை அவர் பட்டியலிட்டார்.

மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை  செயலர் திரு ராஜேஷ் அகர்வால் ,மூத்த அதிகாரிகள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

******

AP/PKV/DL



(Release ID: 1880709) Visitor Counter : 166