பாதுகாப்பு அமைச்சகம்
கடற்படை தினத்தை முன்னிட்டு விசாகப்பட்டினத்தில் செயல்பாடுகள் குறித்த விளக்க நிகழ்ச்சி
இந்த ஆண்டு, முதல் முறையாக, தலைநகருக்கு வெளியே கடற்படை தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன
Posted On:
02 DEC 2022 4:47PM by PIB Chennai
1971 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், 'ஆபரேஷன் ட்ரைடென்ட்' போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
இந்த ஆண்டு, நாடு தனது சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடும் நிலையில், இந்திய கடற்படை, இந்தியாவின் போர் வீரம் மற்றும் போர்த் திறனை விசாகப்பட்டினத்தில் டிசம்பர் 4 2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் 'செயல்பாட்டு விளக்கம்' நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்த உள்ளது. குடியரசுத் தலைவரும் முப்படைகளின் தலைவருமான திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியைக் காண உள்ளார். கடற்படை தலைமைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், மத்திய மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த பல உயரதிகாரிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாரம்பரியமாக, குடியரசுத் தலைவர் மற்றும் பிற உயரதிகாரிகள் முன்னிலையில் புதுதில்லியில் கடற்படை தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, முதல் முறையாக, தலைநகருக்கு வெளியே கடற்படை தின கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்திய கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் மற்றும் கிழக்கு, மேற்கு மற்றும் தென் மண்டலக் கடற்படைப பிரிவுகளின் சிறப்புப் படைகள் கடற்படையின் திறனையும், பல்துறைத்திறனையும் வெளிப்படுத்தவுள்ளன. இந்நிகழ்ச்சி சூரிய அஸ்தமனத்தின்போது, இந்த விழா கப்பல்களில் ஒளியேற்றுதலுடன் நிறைவடையும்.
கடற்படை தின கொண்டாட்டங்கள், மக்கள் மத்தியில் கடல்சார் உணர்வுக்கு புத்துயிரூட்டுதல், தேசிய பாதுகாப்பிற்கான கடற்படையின் பங்களிப்பை எடுத்துரைத்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
**************
SM/PLM/RS/IDS
(Release ID: 1880564)
Visitor Counter : 226