பாதுகாப்பு அமைச்சகம்

ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக உதவுமாறு மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கோரிக்கை

Posted On: 29 NOV 2022 1:27PM by PIB Chennai

ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரின் நலனைப் பாதுகாப்பது  குடிமக்களின் அடிப்படை மற்றும் கூட்டு பொறுப்பு என்று குறிப்பிட்டு, ஆயுதப் படைகளின் கொடி நாள் நிதிக்கு தாராளமாக உதவுமாறு மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை, புதுதில்லியில் இன்று  ஏற்பாடு செய்திருந்த ஆயுதப்படைகளின் கொடிநாள் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைப் பாதுகாத்த ஓய்வு பெற்ற மற்றும் தற்போது பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

“சுதந்திரம் முதல், போர்களை வெல்வதிலும், எல்லைகளில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதிலும்  நமது வீரர்கள் ஏராளமானோர் தங்களது இன்னுயிரை இழந்ததோடு பலர், உடல் ஊனமுற்றனர். அவர்களது குடும்பத்தினர் மீதான பொறுப்பு அவர்களை சார்கிறது. எனவே நமது வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்வந்து ஆதரவளிப்பது நமது தலையாய கடமை. எல்லைகளில் எப்போதும் விழிப்புடன் இருக்கும் நமது துணிச்சலான ராணுவ வீரர்களால் தான் அச்சமின்றி நாம் நமது இல்லங்களில் நிம்மதியாக உறங்க முடிகிறது”, என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை கொள்வது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, மாறாக அது அனைவரின் கடமை என்று வலியுறுத்திய அவர், தேச பாதுகாப்பு வலுவாக இல்லாமல், எந்த ஒரு நாட்டிலும் தொழில்துறைகளும், வர்த்தகங்களும் வளர முடியாது என்று தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளில் பெரு நிறுவனங்கள் அதிக அளவில் நன்கொடை வழங்கியிருப்பதை பாராட்டிய அவர், வீரர்களின் நலனுக்காக இந்தத் தொகையை மேலும் அதிகரிக்க கோரிக்கை விடுத்தார். ஒவ்வொரு ஆண்டும் இளம் வயதில் ஓய்வு பெறும் சுமார் 60,000 ராணுவ வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு தனியார் துறையினரை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது http://www.affdf.gov.in/ என்ற ஆயுதப்படைகளின் கொடிநாள் நிதிக்கான புதிய இணையதளத்தை அமைச்சர் திறந்து வைத்தார். இணைய வழியாக நிதி வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆயுதப்படைகளின் கொடி நாளுக்கான இந்த வருட பிரச்சாரத்தின் பாடலையும் அவர் வெளியிட்டார். கொடி நாளுக்காக நிதி உதவி அளித்த முக்கிய நிறுவனங்களை அவர் கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான், முன்னாள் ராணுவ வீரர்கள் நலத்துறை செயலாளர் திரு விஜய் குமார் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

**************

(Release ID: 1879731)

SM/RB/RR



(Release ID: 1879752) Visitor Counter : 161