பாதுகாப்பு அமைச்சகம்

மலேசியாவில் தொடங்கியது இந்திய- மலேசிய கூட்டு ராணுவப் பயிற்சி

Posted On: 28 NOV 2022 1:31PM by PIB Chennai

“ஹரிமாவு சக்தி-2022” என்ற இந்திய- மலேசிய கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவின் க்லுவாங்கில் உள்ள புலாயில் இன்று தொடங்கியது. இந்த  பயிற்சி டிசம்பர் 12-ஆம் தேதி நிறைவடையும். ஹரிமாவு சக்தி என்பது 2012 முதல் இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெறும் கூட்டுப் பயிற்சியாகும்.

இந்திய ராணுவத்தின் கர்வால் ரைஃபிள்ஸ் படையும், மலேசிய ராணுவத்தின் ராயல் மலாய் படையும் இந்தக் கூட்டு பயிற்சியில் கலந்து கொண்டு, வனப்பகுதிகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதற்கான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றன. உத்தி சார்ந்த திறன்கள் மற்றும் படைகளுக்கு இடையேயான இயங்கு தன்மையை மேம்படுத்துவது, ராணுவங்களுக்கு இடையேயான உறவை ஊக்குவிப்பது முதலியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தும் வகையில் இரண்டு நாள் நிறைவு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தக் கூட்டுப் பயிற்சியால்,  இரு நாடுகளின் உறவும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

**************

(Release ID: 1879495)



(Release ID: 1879514) Visitor Counter : 161