தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட 'மேஜர்' திரைப்படம் தேசிய பாதுகாப்புப் படையின் சிறப்பு படை கமாண்டோ பிரிவினருக்கும், 26/11 மும்பை தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் மரியாதை செலுத்தியது
2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி எந்த இந்தியராலும் எப்போதும் மறக்க முடியாத நாளாகும். அந்தநாளில் இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை மீது தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தியதால் ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ச்சிக்குள்ளானது. இந்த துக்ககரமான நாளில் மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன், தீவிரவாத தடுப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே, மூத்த காவல்துறை ஆய்வாளர் விஜய் சலாஸ்கர் மற்றும் பல பாதுகாப்புப் படையினர் நாட்டு மக்களின் உயிரை பாதுகாப்பதற்காக போராடி தேசத்துக்காக தங்களது இன்னுயிரை அர்ப்பணித்தனர்.
இந்த ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதலின் 14-வது ஆண்டு தினம் அனுசரிக்கப்பட்ட சூழலில், 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணனின் தியாகத்தை எடுத்துரைக்கும் இந்தி திரைப்படமான 'மேஜர்' திரையிடப்பட்டது. தேசத்துக்காக வீரமரணமடைந்தவரின் துணிச்சலை போற்றும் வகையில் எடுக்கப்பட்ட மனதை நெகிழ வைக்கும் இந்தத் திரைப்படத்தை இந்திய மற்றும் சர்வதேச பிரதிநிதிகள் பார்த்தனர். இந்தியன் பனோரமாவில் இடம்பெற்ற இந்த மேஜர் திரைப்படம் தெலுங்கு இயக்குநர் சசிகிரண் டிக்காவால் இயக்கப்பட்டுள்ளது.
பத்திரிகை தகவல் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஊடகத்துறையினர் மற்றும் திரைப்பட விழாவிற்கு வந்திருந்த பிரதிநிதிகளுடன் திரைப்படத்தின் இயக்குநர் சசிகிரண் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், தேசத்தை காக்கும் வீரர் என்பதற்கு பின்னால் சிறந்த மனிதாபிமானம் கொண்ட நபர் சந்தீப் என்றும், அவரது கதையை இந்தப் படம் எடுத்துரைப்பதாகவும் கூறினார். இந்த திரைப்படத்திற்காக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டதாகவும், அவரின் பெற்றோரிடம் பல்வேறு கருத்துகளை கேட்டதாகவும் சசிகிரண் தெரிவித்தார். சந்தீப் பணிபுரிந்த தேசிய பாதுகாப்புப் படை மற்றும் ஏழாவது பீகார் ரெஜிமண்ட் பிரிவினருடன் அவரை பற்றிய விவரங்களை கேட்டறிந்ததாக சசிகிரண் குறிப்பிட்டார். அவர் படித்த பள்ளிக்கும் சென்றதாக இயக்குநர் தெரிவித்தார்.
சந்தீப்பின் பெற்றோருக்கு முதல்முதலாக இந்த திரைப்படத்தை திரையிட்டு காட்டியதையும் இயக்குநர் சசிகிரண் டிக்கா எடுத்துரைத்தார். அது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணமாக இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
ஆதிவிசேஷ் இந்த திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். அவர் இத்திரைப்படத்தில் சந்தீப் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதுதொடர்பாக விளக்கிய அவர், சந்தீப் உன்னி கிருஷ்ணனின் முகம் மற்றும் உடலமைப்பை போலவே தனது முகம் மற்றும் உடலமைப்பு உள்ளதாக தெரிவித்தார். சந்தீப் என்ற உன்னதமான மனிதருக்கு அஞ்சலி செலுத்த இதைவிட வேறு சிறந்த வழியில்லை என்று அவர் கூறினார்.
திரைப்பத்தை பற்றிய சுருக்கம்:
மும்பை தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் வாழ்க்கையை விளக்கும் வகையில் மேஜர் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையின் சிறப்பு அதிரடிப் படை பிரிவில் பணியாற்றிய அவர், தாஜ் நட்சத்திர விடுதியில் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பலரை விடுவித்து அவர்களது உயிரை காப்பாற்றினார். தன்னைப் பற்றி கவலைப்படாமல், கொடூரமான தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொண்டு வீரத்துடன் பலரது உயிரை காப்பாற்றிய சந்தீப் உன்னி கிருஷ்ணனின் சாகசத்தை இத்திரைப்படம் எடுத்துரைக்கிறது.
திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த விவரம்:
சசிகிரண் டிக்கா முன்னணி தெலுங்கு திரைப்பட இயக்குநர் ஆவார். திகில் திரைப்படமான கூடாச்சாரி என்ற படத்தை 2018-ஆம் ஆண்டு இயக்கி இயக்குநராக அவர் அறிமுகமானார். மேஜர் திரைப்படத்தை சோனி நிறுவனத்தின் இந்திய உள்ளூர் மொழிகள் தயாரிப்பு பிரிவு தயாரித்துள்ளது.
**************
AP/PLM/KG/KRS
(Release ID: 1879507)
Visitor Counter : 180