தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
53 -வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் “தாளம் மற்றும் சந்தம்” குறித்த மாஸ்டர் வகுப்பு
இசைக்கு எல்லைகள் என்பதே கிடையாது. ஒரு படத்திற்கு இசையமைக்க இதுதான் எல்லை என்றோ, இதுதான் விதி என்றோ எதுவும் கிடையாது. கதையும், இயக்குனரும் எதை எதிர்பார்க்கிறார்களோ அதற்கு ஏற்ப இசையமைப்பதுதான் அந்த குறிப்பிட்ட படத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமையும் என்று பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார். கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 53-வது பதிப்பில் "தாளம் மற்றும் சந்தம்" என்ற தலைப்பில் நடைபெற்ற மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது கூறினார்.
இசை என்பது ஒன்றோடொன்று தொடர்புடைய சங்கிலித் தொடர் போன்றது அல்ல. அந்தந்த சூழலுக்கு தேவையான உணர்வுகளை கடத்தும் வகையில் அமைய வேண்டும், கதையோடு ஒன்றிச் செல்ல வேண்டும், பாத்திரப்படைப்புகளை நம் கண்முன்னே நிறுத்துவதாக அமைய வேண்டும், கதையின் அந்த குறிப்பிட்ட நிகழ்வுக்கு ஆதரவளிப்பதாக இருக்க வேண்டும் என்று கூறிய ஜி.வி.பிரகாஷ், சொல்லப்படும் கதை முழுமையாக ரசிகரின் மனதை கவரும் வகையில் அதற்கான இசைக்கோர்ப்பு அமைய வேண்டுமென்று கூறினார்.
நமது வாழ்வின் ஒரு அங்கமாகவும், கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடாகவும் இசை நம்மோடு பயணிக்கிறது என்று கூறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இசை என்பது மனித குலத்தின் துவக்க காலத்திலிருந்தே பயணப்பட்டு வருவதாக தெரிவித்தார். விருதுகள் பல வென்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பல்வேறு படங்களுக்கு இசையமைத்த தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது, படத்தின் இயக்குனருக்கும், இசையமைப்பாளருக்கும் இடையிலான நம்பிக்கையும், புரிதலுமே மிக முக்கியமான அம்சங்கள் என்று கூறினார். திரைப்படங்களுக்கு இசையமைப்பது என்று வருகையில், பல வித்தியாசமான அணுகுமுறைகள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார். சில படங்களில் இசை படத்தின் கதைக்கு மெருகூட்டும் சில படங்களின் நிசப்தம் படத்தின் காட்சிக்கு உயிரூட்டும் என்றார்.
நாட்டுப்புற இசையிலான பாடல்கள் சில படங்களின் நிகழ்விடம், அதன் கலாச்சாரம், கதையின் போக்கு ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக உதவுகிறது என்று அவர் கூறினார். இதனால் இசையமைப்பாளர் தான் இசையமைக்கும் படங்களின் புவியியல் கலாச்சார பின்புலத்தை மனதில் கொண்டு இசையமைக்க வேண்டுமென்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் சினேகா கான்வால்கர், திரைப்படங்களுக்கு இசையமைப்பது என்பது சிக்கலான, அதே சமயத்தில் ஒருங்கிணைந்த ஒரு முயற்சி என்றார். இதற்கு இசை மீதான காதல் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டார். கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, வளரும் இசையமைப்பாளரான கான்வால்கர் தனது அனுபவம், தான் வாழ்ந்த சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இசையமைத்தால் அது உண்மைக்கு நெருக்கமாகவும், மிகவும் மாறுபட்டதாகவும் இருக்கும் என்று கூறினார்.
தேசிய விருது பெற்ற திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் இந்த அமர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார்.
**************
(Release ID: 1879043)
Visitor Counter : 184