பாதுகாப்பு அமைச்சகம்
தேசிய மாணவர் படையின் 74-வது ஆண்டுவிழா; தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புச் செயலாளர் அஞ்சலி செலுத்தினார்
Posted On:
26 NOV 2022 10:52AM by PIB Chennai
1948-ஆம் ஆண்டு நவம்பர் 27-ம் தேதி உலகில் அதிக அளவிலான மாணவர்களை உள்ளடக்கிய தேசிய மாணவர் படை (என்சிசி) உருவாக்கப்பட்டது. இதன் 74-வது ஆண்டுவிழாவையொட்டி, புதுதில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புச் செயலாளர் திரு கிரிதர் அரமனே அஞ்சலி செலுத்தினார். இவ்விழாவில் பேசிய அவர், தேசத்தைக் கட்டி எழுப்பும் முயற்சியில் ஏராளமான இளைஞர்களை இணைக்கும் பணியில் தேசிய மாணவர் படை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார்.
தேசிய மாணவர் படை உருவான தினம் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களிலும் கொண்டாடப்படுவதாக குறிப்பிட்ட அவர், என்சிசி சார்பில், பேரணி கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சமூக நலன் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எல்லைகள் மற்றும் கடலோரப்பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என்சிசி மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் மேல் அதிகரித்திருப்பதாகக் கூறினார். ஆயுதப்படையில் சேர்ந்து தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வத்தை மாணவர்கள் மத்தியில் என்சிசி உருவாக்கி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச உறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 25-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இளைஞர்களை பரிமாற்றம் செய்து கொள்ளும் திட்டத்தின் மூலம் அமைதி மற்றும் ஒற்றுமை தூதர்களாக தேசிய மாணவர் படையினர் ஈடுபடுத்தப்படுவதாகவும் திரு கிரிதர் அரமனே கூறினார்.
தன்னிறைவு, விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்தல் மற்றும் வீர, தீர சாகச செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றில் இளைஞர்களுக்கு பிரத்யேக வாய்ப்பை என்சிசி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
**************
(Release ID: 1879034)
Visitor Counter : 313