தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

படத்தொகுப்பின் நுணுக்கங்கள் பற்றி புகழ்பெற்ற திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் பகிர்ந்து கொள்கிறார்

Posted On: 25 NOV 2022 6:19PM by PIB Chennai

புகழ்பெற்ற திரைப்பட படத்தொகுப்பாளர்  ஏ ஸ்ரீகர் பிரசாத், இன்று கோவாவில் 53 வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவின்  மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சியில்திரைப்படப் படத்தொகுப்பின்    நுணுக்கங்களைப் பற்றிய முக்கிய அம்சங்களைப் பகிர்ந்து கொண்டார்.

திரைப்பட இயக்குநர்கள்  பார்வையாளர்களை நன்கு அறிந்திருக்க வேண்டும், அவர்களது விருப்பங்களை நன்கு உணர்ந்திருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பார்வையாளர்களை நன்கு அறியும் இலக்கை அடைவது  படத்தின் வெற்றியை உறுதிப்படுத்த உதவுகிறது.

படங்களில் காணப்படும் மிகைப்படுத்தல்கள் பற்றி பேசிய பிரசாத், படம் மற்றும் நடிகர்களைப் பொறுத்து மிகைப்படுத்தலின் அளவு மாறுபடும் என்று கூறினார். ‘ஸ்டார் படங்களில், ரசிகர்களை மகிழ்விக்கும் தருணங்களை பெரிதுபடுத்துகிறோம் என்றார்.

தனது திரைப்பட அனுபவத்தைப் பற்றிக் கூறிய  ஸ்ரீகர் பிரசாத், ஒவ்வொரு அனுபவமும் இன்னொரு அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது என்றார். என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அனுபவம் கற்றுக்கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் இது ஒரு கற்றல் அனுபவமாக இருக்க வேண்டும். இது முடியாது போலிருக்கிறது என்று கை விட்டு விடுவது மிகவும் எளிதானது. ஆனால் இலக்கை நோக்கி உழைத்து அதை அடைவது மிகவும் சவாலானது என்று அவர் கூறினார்.

 

இளம் திரைப்பட இயக்குநர்கள்  எடிட்டிங் மேஜையில் அமரும் வரையில் படத்தின் ஒரு காட்சியை வெட்டுவது என்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது. பல இயக்குனர்களுக்கு எடிட்டிங் அறை அனுபவம் இல்லை. முன்னதாக, திரைப்பட இயக்குநர்கள் தங்கள் இயக்கத்தை சிறப்பாகச் செய்ய அந்த அனுபவத்தைப் பெறுவது கட்டாயமாக இருந்தது. இப்போது, படம் எடிட்டிங் அறைக்கு வருவதற்கு முன்பே பல மென்பொருள்களின் உதவியுடன் இன்னும் அதிகமாகத் திருத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஆனால் சரியான விஷயத்தைப் பெறுவது கடினமாக உள்ளது என்று தற்போதைய நிலையை அவர் விளக்கினார்.

 

படத்தின் வெற்றிக்கும், சிறப்புக்கும் படத்தொகுப்பு மிகவும் முக்கியமானது என்று கூறிய பிரசாத், சில அமைதியான காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதும், பின்னணி இசையுடன், வேறு உணர்ச்சியை ஏற்படுத்துவதும் உண்டு என்றார்.

பாடல்களை படமாக்கும்போது எதை மனதில் கொள்ள வேண்டும் என்ற பார்வையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், 'பாடல்கள் எப்போதுமே திரைப்பட வரலாற்றின் ஒரு பகுதியாகும், மேலும் இது காட்சி உயர்வைக் கொடுக்கப் பயன்படுகிறது. முன்பெல்லாம் பாடல் வரிகள் கதையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது நிலைமை மாறி படத்தின் பாடல்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவிட்டது’ என்றார்.

 

கிளைமாக்ஸ் படத்தின் உச்சக்கட்ட காட்சிக்கான செயல்முறை குறித்த கேள்விக்கு பதிலளித்த ஸ்ரீகர் பிரசாத், 'கிளைமாக்ஸ் கதையின் உச்சத்தை அடைவதற்கான  ஒரு பெரிய பங்கை வகிக்கிறது. க்ளைமாக்ஸ் சரியில்லை என்றால் படம் முழுமையடையாது. துரதிர்ஷ்டவசமாக இந்திய சினிமாவில், இரண்டு கிளைமாக்ஸ்கள் உள்ளன, ஒன்று இடைவேளையில் மற்றொன்று இறுதியில். சில சமயங்களில் முதல் பாதி இரண்டாம் பாதியை விட சிறப்பாக இருக்கும். க்ளைமாக்ஸ் என்பது படத்தின் கடைசிக் காட்சி என்பதால் பார்வையாளர்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்’ என்று கூறினார்.

**************

SM / PKV / DL



(Release ID: 1878956) Visitor Counter : 155