மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இல்லத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நேரில் சென்று பாரதியாரின் மருமகனை சந்தித்து உரையாடினார்
Posted On:
18 NOV 2022 5:04PM by PIB Chennai
வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இல்லத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் நேரில் சென்று பாரதியாரின் மருமகனை சந்தித்தார். தமிழுக்கு மகாகவி பாரதியார் ஆற்றிய அரும்பெரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே உள்ள பண்டைய கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உறவுகள் குறித்து இன்றயை இளம் தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி வாரணாசி சென்றுள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அங்கு கங்கை நதியின் அனுமன் படித்துறையையொட்டி அமைந்துள்ள மகாகவி பாரதியாரின் இல்லத்தை பார்வையிட்டார். அங்கு பாரதியாரின் 96 வயது மருமகன் திரு கே வி கிருஷ்ணனை சந்தித்து பாரதியாரின் நினைவுகள் குறித்து கலந்துரையாடினார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் கலாச்சாரத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை முறைப்படி தொடங்கிவைக்கிறார். நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டி இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அடுத்த மாதம் 16ம் தேதி வரை நடைபெறும் இந்த சங்கம நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த 2,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் இதில் இடம் பெறுகின்றனர் .
***************
MSV/ES/KPG/KRS
(Release ID: 1877075)
Visitor Counter : 121