சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருதை இந்தியா வென்றுள்ளது

Posted On: 18 NOV 2022 12:50PM by PIB Chennai

நவீன குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அமல்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும், அதற்கு கிடைத்த அங்கீகாரமாகவும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விருதை இந்தியா வென்றுள்ளது. குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் சிறப்பான தலைமைத்துவத்துக்கான விருது 2022 என்ற இந்த விருதை தாய்லாந்தின் பட்டாயா நகரில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் (ஐசிஎஃப்பி) இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. நாடுகள் பிரிவில் இந்த விருதை பெற்ற ஒரே நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான இந்தியாவின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு கிடைத்த அங்கீகாரம் இது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு.மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதவில், ஐசிஎஃப்பி 2022 மாநாட்டில் மதிப்புமிக்க இந்த விருதை இந்தியா வென்றுள்ளது எனக் கூறியுள்ளார். சரியான தகவல் மற்றும் நம்பகமான தேவைகளின் அடிப்படையில் தரமான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை அணுகுவதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும், இது பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

நாட்டில் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளும் திருமணமான பெண்களின் விகிதம் 2015-16-ஆம் ஆண்டில் 66 சதவீதமாக இருந்தது. 2019-21 ஆண்டில் அது 76 சதவீதமாக அதிகரித்தது.  உலகளவில் 2030-ஆம் ஆண்டில் இந்த சதவிகிதம் 75-ஆக இருக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இந்தியா ஏற்கனவே அந்த இலக்கை எட்டியுள்ளது. பரிவார் விகாஸ் எனும் முன்னோடி திட்டம் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி இதில் முன்னேற்றங்களை அடைய வழிவகுத்துள்ளது.

ஐசிஎஃப்பி என்ற குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 3 ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் நேரடியாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணொலி  வாயிலாகவும் பங்கேற்றனர்.

**************

MSV/PLM/KG/KRS



(Release ID: 1877036) Visitor Counter : 796