மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் புதுதில்லியில் ஃபின்லாந்து கல்வி அமைச்சர் திரு. பெட்ரி ஹொன்கோனெனுடன் பேச்சு நடத்தினார்
Posted On:
15 NOV 2022 5:56PM by PIB Chennai
மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஃபின்லாந்தின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு. பெட்ரி ஹொன்கோனெனுடன் புதுதில்லியில் பேச்சு நடத்தினார். கொவிடு-க்கு பிந்தைய சவாலான காலங்களில் கல்வித் துறையின் முக்கிய பிரச்சனைகள் குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர். குழந்தைகளின் கற்றல் இடைவெளியைக் குறைக்க உறுதியான அணுகுமுறை தேவை என்று அவர்கள் இருவரும் குறிப்பிட்டனர். இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்தும் அமைச்சர்கள் ஆலோசித்தனர். இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னுரிமை தூணாக அறிவாற்றலை உருவாக்குவது மற்றும் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் எல்லைப்புற ஆராய்ச்சி ஆகிய அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் அவர்கள் பயனுள்ள ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திரப் பிரதான், இந்தியாவுடன் அறிவுசார் துறையில் ஒத்துழைக்க ஃபின்லாந்து ஆர்வம் காட்டுவதாக கூறினார். குறிப்பாக புதிய தேசிய கல்விக் கொள்கையில் இருந்து ஏற்படும் பலன்களின் விளைவாக, ஃபின்லாந்து இந்த ஒத்துழைப்பை அதிகரிக்க விரும்புவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியா, ஃபின்லாந்து ஆகிய இரண்டு நாடுகளும் ஆரம்ப கால குழந்தைகள் பராமரிப்பு, ஆசிரியர் பயிற்சி, டிஜிட்டல் கல்வி போன்றவற்றில் ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டு பயனடையலாம் என்று அவர் மேலும் கூறினார். ஃபின்லாந்து பல்கலைக்கழகங்கள் இந்திய உயர்கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட அவர் அழைப்பு விடுத்தார். வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் தங்களது வளாகங்களை இந்தியாவில் அமைக்க அனுமதிக்கும் கொள்கையை மத்திய அரசு விரைவில் கொண்டு வரவுள்ளதாகவும் திரு தர்மேந்திரப் பிரதான் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கை, ஃபின்லாந்தின் கல்வியியல் கொள்கைகளுடன் பல அம்சங்களில் இணைந்திருப்பதாக ஃபின்லாந்து அமைச்சர் ஹொன்கோனெனுன் சுட்டிக்காட்டினார். மாணவர் சார்ந்த அணுகுமுறை மற்றும் செயல்வழிக் கற்பித்தல் ஆகியவை ஃபின்லாந்து கல்வி முறையின் முக்கிய அம்சங்கள் என்று அவர் குறிப்பிட்டார். ஃபின்லாந்தின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகம், கல்வித் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைத்துச் செயல்படுவதற்கு ஃபின்லாந்து பல்கலைக்கழகங்களுக்கு குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஃபின்லாந்து அமைச்சர் தெரிவித்தார்.
ஃபின்லாந்தின் தேசிய கல்வி முகமை பள்ளிக் கல்வியின் பல்வேறு பிரிவுகளில் தகவல் மற்றும் உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் கல்வி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
-------
SG/PLM/RS/IDS
(Release ID: 1876228)
Visitor Counter : 592