சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷர்ம் எல்-ஷேக் நகரில் நடைபெறும் ஐநா பருவநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய அரங்கில், “சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை தொடர்பான தத்துவத்தை புரிந்து கொள்வது” என்ற தலைப்பிலான நிகழ்ச்சி நடைபெற்றது

Posted On: 14 NOV 2022 4:26PM by PIB Chennai

எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் நடைபெறும் ஐநா பருவநிலை மாநாட்டின் ஒரு பகுதியாக இந்திய அரங்கில், சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை தொடர்பான தத்துவத்தை புரிந்து கொள்வது என்ற தலைப்பிலான  நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்தியாவும், இந்தியாவில் உள்ள ஐநா பிரிவும் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் ஐங்கர் ஆன்டர்சன் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

 இந்நிகழ்ச்சியில் “முயற்சியில் இருந்து விளைவு வரை” என்ற சுருக்கத்தொகுப்பை பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து சுற்றுச்சூழல்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் வெளியிட்டார். சிறந்த வாழ்க்கை நெறிமுறைகளை உள்ளடக்கிய இந்தியாவின் பாரம்பரிய நடைமுறைகளை இந்த தொகுப்பு எடுத்துரைக்கிறது. முக்கிய மற்றும் சிறந்த செயல்பாட்டு மாற்றங்களுக்கான செயல்திட்டங்களை  இது எடுத்துக்காட்டுகிறது.

அவற்றின் முக்கிய அம்சங்கள் சில,

  • பொறுப்புணர்வுடன் கூடிய நுகர்வு: தேவையானவற்றை மட்டும் பயன்படுத்தும் நுகர்வோர் கலாச்சாரம்  மற்றும் மறுசுழற்சி போன்றவற்றை இது குறிக்கிறது.
  • சுழற்சி பொருளாதாரம்: வளத்தை மேம்படுத்தவும், கழிவுகள் மற்றும் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், சூழல் மேம்பாட்டை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
  • இயற்கையுடன் நல்லிணக்கத்தோடு வாழ்தல்: வசுதைவக் குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) என்ற தத்துவத்தை கடைப்பிடிப்பதையும், அனைத்து உயிர்களிடமும் இரக்கம் காட்டி வாழ்வதையும் இதுகுறிக்கிறது.
  • நீடித்த வள மேலாண்மை:  கிடைக்கக்கூடிய வளங்களை கவனத்துடனும், சிறப்பாகவும் பயன்படுத்துவதன் மூலம்  நிலையான வள மேலாண்மை ஏற்படுவதுடன் அதிகப்படியான நுகர்வு குறைக்கப்படுகிறது. மேலும்  வளங்களுக்கான அணுகல் சமமான முறையில் மேம்படுத்தப்படுகிறது.
  • நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒத்துழைப்பு :  அறிவியல் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளை மேம்படுத்துல், அறிவாற்றல் பகிர்வு, சிறந்த நடைமுறைகளை பரப்புதல், பாரம்பரிய அறிவாற்றல் முறைகளை பாதுகாத்தல் போன்றவற்றின் மூலம் நாடுகளுக்கும், சமூகங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க முடியும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், “பருவநிலை மாற்றத்திற்கு எதிரான பொதுவான  போராட்டத்தில் சிக்கலான சூழலில் இருக்கிறோம். இந்த சிக்கலை எதிர்கொள்ள அரசின் முயற்சிகள் மட்டும் போதாது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மற்றும் தனிநபர்கள் இணைந்து நீடித்த மற்றும் நிலையான பூமிக்கான சூழலை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். லைஃப் எனப்படும் சுற்றுச்சூழலுக்கேற்ற  வாழ்க்கை முறை தொடர்பான தாரக மந்திரம் இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியால் வழங்கப்பட்டுள்ளது. இது பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தனிநபர் பங்களிப்பை எடுத்துரைக்கிறது.

 இந்தியாவும், எகிப்தும் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய கலாச்சார உறவுகளை கொண்டுள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் இந்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கிய அம்சமாக எடுத்துக்கொண்டு கொள்கைகளை வகுத்து செயல்படுகிறது.  இந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி லைஃப் என்ற சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை இயக்கம்  ஐநா தலைமைச் செயலாளர் திரு அன்டோனியா குட்ரஸ் முன்னிலையில் பிரதமரால் வெளியிடப்பட்டது.

நமது அன்றாட வாழ்க்கையில் நீடித்த நிலையான அம்சங்களை மட்டுமே நாம் தேர்வு செய்ய வேண்டும். நமது  பூமி ஒன்றே. ஆனால் நமது முயற்சிகள் பலவாக இருக்க வேண்டியது அவசியம். சிறந்த சுற்றுச்சூழலுக்காகவும் உலக நன்மைக்காகவும் மேற்கொள்ளப்படும் எந்த முயற்சிக்கும் ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளது” என்றார்.

 

**************

MSV/PLM/AG/IDS


(Release ID: 1875871) Visitor Counter : 163


Read this release in: Kannada , English , Urdu , Hindi