தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
iffi banner

2-வது இந்திய சர்வதேச திரைப்படவிழா: ஒரு பார்வை

53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா தொடங்க இன்னும் ஆறு நாட்களே உள்ளன.  இந்த கொண்டாட்டங்கள் புதுப்பொலிவுடன் நமது மனதை வருடும் இந்த சூழலில், இந்த திரைப்பட விழாவின் வரலாற்றுப் பக்கங்களில் நாம் சிறிது பயணித்து அதன் தொடக்கத்தை நினைவு கூர்வோம். கடந்த காலத்தின் வேர்களுடன் இணைந்திருப்பதன் மூலம் நிகழ்காலத்தை பற்றிய புரிதலும், எதிர்காலத்திற்கான பார்வையும் ஊக்குவிக்கப்படுகிறது.

1952-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது இந்திய சர்வதேச  திரைப்பட விழாவுக்கும், 1961-ம் ஆண்டு நடைபெற்ற 2-வது இந்திய  திரைப்பட விழாவுக்கும் இடையேயான இடைவெளி  குறித்து நாம் பின்னோக்கி பார்ப்போம். ஆம், முதலாவது திரைப்பட விழா நடந்த பின்னர், 9 ஆண்டுகள் பிறகே இரண்டாவது விழா புதுதில்லியில் 1961-ம் ஆண்டு அக்டோபர் 27-ந் தேதி முதல் 2-ம் தேதி வரை நடைபெற்றது.

இந்திய சர்வதேச திரைப்பட விழா என்ற நிகழ்ச்சி ஏன்?  இந்த திரைப்பட விழாவின் நோக்கம் தொடர்பாக 1961-ம் ஆண்டு 2-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அப்போதைய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு பி வி கேஷ்கர் கூறிய கருத்துக்கள்:-

“சர்வதேச திரைப்பட விழாக்களின் நோக்கம் என்பது இதில் பங்கேற்கும் நாடுகளின் கலை மற்றும் கலாச்சார மதிப்புகள் மற்றும் உயர் தொழில்நுட்ப தரம் கொண்ட திரைப்படங்களை திரையிட ஒரு தளத்தை ஏற்படுத்தித் தருவதே. இத்தகைய திரையிடல்கள் பொதுவாக திரைப்படத்துறையின் முன்னேற்றத்திற்கு உதவுவதோடு  கலாச்சார பரிவர்த்தனையை ஊக்குவித்து புதிய சிந்தனைகளை உருவாக்குகின்றன. பங்கேற்கும் நாடுகள் மற்றும் அந்த நாடுகளின் திரைத்துறையை இவை நெருக்கமாக்குகின்றன.”

2-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கவுரை ஆற்றிய  அப்போதைய குடியரசு துணைத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நாடுகளுக்கிடையேயான சிந்தனை பரிமாற்றத்தின் முக்கியத்துவம் குறித்தும், கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.

அதிக லாப நோக்கத்தை காட்டிலும், சிறந்த கலைத்திறனை மையமாக கொண்டு திரைப்பட தயாரிப்பாளர்கள் செயல்பட வேண்டும் என்று அப்போதைய குடியரசு துணைத்தலைவர் அறிவுறுத்தினார்.  திரைப்படங்கள் பொது மக்களின் ரசனையை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் அவர்களது ரசனையை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

திரைப்பட உருவாக்கத்தில் தொடர்புள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட அனைவருமே தங்களது அறிவு, திறமை, கற்பனைத்திறன், கலைத்திறன் ஆகியவற்றை நீதி, சுதந்திரம், அமைதி, கண்ணியம் ஆகியவற்றுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்றும், வேறு எதற்காகவும் தங்களது திறனை பயன்படுத்த மாட்டோம் எனவும், உறுதியேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். லாபம் ஈட்டும் ஆர்வத்தில் மனித இயல்பை மாசுபடுத்துவதோ, தனிநபர்களை இழிவுபடுத்தவோ கூடாது என்று வலியுறுத்தினார். இதுபோன்ற செயல்கள் அபாயகரமானவை என்றும் இவற்றை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். தரமான திரைப்படங்களின் மூலம் லாபம் பெற முடியும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறிய அவர் இதன் மூலம் மற்ற நாடுகளில் நமது திரைப்படங்கள் எந்தவிதமான தரநிலையை எட்டியுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார்.  இந்த திரைப்பட விழாவின் மூலம் சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம் என்றும் அவற்றின் மூலம் நாம் பயனடைய முடியும் எனவும் அப்போதைய குடியரசு துணைத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

**************

MSV/PLM/AG/IDS

iffi reel

(Release ID: 1875819) Visitor Counter : 189