பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் தாக்கல் செய்வதை ஊக்குவிக்க ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை குழு மும்பைக்கு அருகிலுள்ள அம்பர்நாத்திற்கு பயணம்

Posted On: 13 NOV 2022 12:19PM by PIB Chennai

மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மத்தியில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் (டிஎல்சி) சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கும் வகையில், தேசிய அளவிலான பிரச்சாரத்தை மத்திய அரசின் பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை தொடங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழியாக,  ஆயுள் சான்றிதழை முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் சமர்ப்பிக்கும் புதிய முயற்சியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கிவைத்தார். தற்போது டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கவும், முக அங்கீகார தொழில்நுட்பத்தை பிரபலப்படுத்தவும்  தேசிய அளவிலான சிறப்பு பிரச்சாரத்தை ஓய்வூதியத் துறை தொடங்கியுள்ளது. ஓய்வூதியதாரர்கள் எளிதாக வாழ்வதற்காக சிறப்பு முகாம்களை நடத்தி டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் அளிப்பது/ முக அங்கீகார தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்ள பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதிய சங்கங்கள், ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், இந்திய அரசின் அமைச்சகங்கள், மத்திய அரசு சுகாதார திட்டத்தின் நல மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வரிசையில், மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் குழு வரும் 16ந்தேதி,மகாராஷ்டிராவில் உள்ள அம்பர்நாத்துக்குச் செல்கிறது, அங்கு மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்காக இந்தப் பிரச்சாரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும். இதில் அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்கள் வாழ்நாள் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம்.

 2022 அக்டோபர் 1வரை மொத்தம் 29 லட்சத்து 29,986 டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 172 ஓய்வூதியதாரர்கள் முக அங்கீகாரம் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைத் தேர்வு செய்துள்ளனர்.  மத்திய அரசு ஓய்வூதியதாரர்களில் டிஜிடல் ஆயுள் சான்றிதழ் முறையைத் தேர்வு செய்துள்ளவர்களின்  எண்ணிக்கை 11 லட்சத்து 95 ஆயிரத்து 594. இதில்,  96,099 மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் முக அங்கீகாரம் மூலம் ஆயுள் சான்றிதழ் தாக்கல் செய்வதை தேர்வு செய்துள்ளனர்.

முன்பெல்லாம், ஆயுள்  சான்றிதழ்களை சமர்ப்பிக்க வயதான ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு வெளியே மணிக்கணக்கில் வரிசையில் கால்கடுக்க நிற்க வேண்டியிருந்தது. இப்போது, வீட்டில் இருந்தபடியே ஒரு பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க முடியும். கைபேசி வழியாக  முக அங்கீகாரம் மூலம் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் செயல்பாட்டில், ஆதார் எண், ஒருமுறை கடவுச்சொல்லுக்கான ( ஓடிபி) கைபேசி  எண், ௴ய்வூதியம் பெறுவதற்கு வழங்கப்பட்ட ஆர்டர்  எண் மற்றும் வங்கி/அஞ்சலக கணக்கு எண் பற்றிய விவரங்கள் முதல் முறையாகத் தேவைப்படும். இந்த வசதி, மாநில ஊழியர்களுக்கும் கிடைக்கிறது.

 

எளிய மொழியில் ஆயுள்  சான்றிதழை எவ்வாறு  சமர்ப்பிப்பது என்பது குறித்த  செயல்முறையை விளக்கும் இரண்டு வீடியோக்களும்  பதிவேற்றப்பட்டுள்ளன. இதைனை காண ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலைத் தொடர்பு கொள்ளுமாறு ஓய்வூதியதாரர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்து ஓய்வூதியதாரர்களும்  இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

**************

MSV/PKV/DL



(Release ID: 1875614) Visitor Counter : 160