விவசாயத்துறை அமைச்சகம்

பயிர்க்கழிவுகள் மேலாண்மை அனைவரது கூட்டுப்பொறுப்பு - வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 04 NOV 2022 5:58PM by PIB Chennai

புசா உயிரி பயிர்க்கழிவு சிதைப்பு திரவம் மற்றும் இயந்திரங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பயிர்க்கழிவுகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் திறம்பட தீர்வுகாண முடியும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் புசா (PUSA) என்ற உயிரி பயிர்க்கழிவு சிதைப்பு  திரவம் (Bio decomposer) உருவாக்கப்பட்டுள்ளது. இதை திறம்பட பயன்படுத்தியும், இயந்திரங்களை பயன்படுத்தியும் பயிர்க்கழிவுகளை அழிப்பது குறித்த பயிலரங்கம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது. பல்வேறு வேளாண் அறிவியல் நிலையங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் காணொலி வாயிலாக இந்த பயிலரங்கத்தில் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய வேளாண் துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், நெற்பயிர்களால் உருவாகும் பயிர்க்கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து சுற்றுச்சூழல் மாசைத் தடுப்பதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது என்றார். பயிர்க்கழிவு மேலாண்மைக்காக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களுக்கும், தில்லிக்கும் மத்திய அரசு   3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்காக 2 லட்சத்து 7 ஆயிரம் இயந்திரங்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும் அதை முறையாக பயன்படுத்தும்போது, பயிர்க்கழிவு மேலாண்மை தொடர்பான விரிவான தீர்வு ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார். தில்லி புசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ள புசா பயிர்க்கழிவுகள் உயிரி சிதைப்பானை  (Pusa Bio decomposer) பயன்படுத்தலாம் என்றும் இதன் மூலம் பயிர்க்கழிவுகள் சிதைக்கப்படுவதால்  விளை நிலங்களின் வளம் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் ரீதியாக இந்த பிரச்சனையை விவாதிப்பதை விட, இதற்கு தீர்வு கண்டு இதிலிருந்து வெளி வருவதற்கான முயற்சிகள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார். மத்திய அரசும், மாநில அரசுகளும் விவசாயிகளின் நலனை நோக்கமாக கொண்டே செயல்படுவதாக அவர் தெரிவித்தார். பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவது தீவிரமான பிரச்சனை என்று கூறிய அவர், இது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார். எனவே, இதற்கு முறையாக தீர்வு காண்பதன் மூலம் மண்ணையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும் என்றார்.

 புசா உயிரி சிதைப்பானை பயன்படுத்திய விவசாயிகள் தங்களது அனுபவங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டனர். மத்திய வேளாண்துறை செயலாளர் திரு மனோஜ் அகுஜா, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் திரு அசோக்குமார் சிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

**************

AP/PLM/RS/IDS



(Release ID: 1873821) Visitor Counter : 156