கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசு திட்டங்களின் செயல்பாட்டில் இளைஞர்கள் முழுமையாக ஈடுபட்டு இந்தியாவை உலகளாவிய ஆற்றல் மையமாக உருவாக்க வேண்டும்: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்

Posted On: 04 NOV 2022 6:19PM by PIB Chennai

 இந்தியாவின் தொலைநோக்கு திட்டம் 2030, சாகர் மாலா, பிரதமரின் விரைவு சக்தி போன்ற மத்திய அரசின் திட்டங்களில் மாணவர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இந்தியாவில் உலகளாவிய ஆற்றல் மையமாக உருவாக்க வேண்டும் என்று மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

 சென்னையை அடுத்த உத்தண்டியில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் இன்று  (04.11.2022) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்கினார். பிரதமரின் தொலைநோக்கு திட்டமான தற்சார்பு இந்தியா திட்டத்தை  இந்திய கடல்சார் பல்கலைக்கழக மாணவர்கள் செயல்படுத்தி உலகளாவிய சமூகத்தை ஈர்க்க வேண்டும் என்று அமைச்சர் தமது பட்டமளிப்பு விழா உரையில் கேட்டுக்கொண்டார்.  தற்போதுள்ள உலக நிலைமையை பயன்படுத்தி சிறந்தவற்றுடன் போட்டியிடுவதோடு, நாம் தான் சிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியா உலக தலைமைத்துவம் பெறுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் கூறினார்.

குவிந்து கிடக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மாநிலங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இளைஞர் சக்தியை பயன்படுத்தி நாளைய உலகத்திற்கு இந்தியாவை தலைமை ஏற்க செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

 ஆயுஷ் துறையின் வளர்ச்சி பற்றி பேசிய திரு சர்பானந்த சோனாவால், 2014-ல் 3 பில்லியன் டாலராக இருந்த பாரம்பரிய மருந்துகளின் ஏற்றுமதி இப்போது 18.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்றார். பாரம்பரிய மருந்துகளின் விரிவாக்க அலுவலகத்தை உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் அமைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

 இந்த விழாவில், பிஎச்டி, முதுநிலைப் பட்டம்  உட்பட 400  பேருக்கு பட்டங்களை அமைச்சர் வழங்கினார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இப்பல்கலைக்கழக மையங்கள் மூலம் 3700 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடல்சார் படிப்புகளில் கொள்கை ஆராய்ச்சிக்கான மையத்தை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் திறந்துவைத்தார்.  இந்த நிகழ்வுகளில் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழிப்பாதைகள் மற்றும் சுற்றுலாத்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், பல்கலைக்கழக துணைவேந்தர் திருமதி மாலினி சங்கர், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்வேறு தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***************

SM/SG/SMB/AG/IDS


(Release ID: 1873802) Visitor Counter : 161