சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடுப்பது தொடர்பாக காற்று தர மேலாண்மை ஆணையம் ஆய்வுக் கூட்டம்
Posted On:
04 NOV 2022 2:45PM by PIB Chennai
பஞ்சாபில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடுப்பது குறித்து தேசிய தலைநகர் பகுதி காற்று தர மேலாண்மை ஆணையம் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. இதில் பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர் மற்றும் அம்மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களைச்சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். பதான் கோட் மாவட்டத்தில் மட்டும் பயிர்க்கழிவு தொடர்பான சம்பவங்கள் ஏதும் நடைபெறாததால் அந்த மாவட்டத்தில் இருந்து அதிகாரிகள் பங்கேற்கவில்லை. கடந்த சில நாட்களில் பஞ்சாபில் பயிர்க்கழிவுகளை எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்து இருப்பதை கருத்தில் கொண்டு இக்கூட்டம் நடத்தப்பட்டது.
அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, பட்டியாலா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிர்க்கழிவு எரிப்பு புகார்கள் வந்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சிறப்பு கவனம் செலுத்தி செயல் திட்டங்களை அமல்படுத்துமாறு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் வரும் நாட்களில் இது குறையும் என்றும் பஞ்சாப் மாநில அதிகாரிகள் உறுதியளித்தனர்.
**************
SM/PLM/RS/IDS
(Release ID: 1873797)