தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
ஐஸாலில் இந்திய மக்கள் தகவலியல் நிறுவனத்தின் (ஐஐஎம்சி) வடகிழக்கு மண்டல வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்
Posted On:
03 NOV 2022 3:48PM by PIB Chennai
ஐஸாலில் இந்திய மக்கள் தகவலியல் நிறுவனத்தின் (ஐஐஎம்சி) வடகிழக்கு மண்டல வளாகத்தை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு திறந்து வைத்தார். மிசோரம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், மிசோரம் பல்கலைக் கழகத்தில் உள்ள இந்த மையத்தை காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இந்த நிறுவனம் மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமாகும்.
2011 ஆம் ஆண்டு ஐஐஎம்சி-யின் வடகிழக்குப்பகுதி வளாகம், மிசோரம் பல்கலைக் கழகத்தின் தற்காலிக கட்டிடத்தில் இயங்க தொடங்கியது. இதற்கான நிரந்தர கட்டிட கட்டுமானப் பணிகள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2015 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இதற்கென 8 ஏக்கர் நிலம் மிசோரம் பல்கலைக் கழகத்தால் வழங்கப்பட்டது. இதில் ஐஐஎம்சி-க்கான நிர்வாக கட்டிடம், வகுப்பறைகளுக்கான கட்டிடம், மாணவர் விடுதிகளுக்கான கட்டிடம், ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை தனித்தனியாக கட்டப்பட்டுள்ளன.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த வளாகத்தில், ஆங்கில இதழியலில் முதுநிலை பட்டயப்படிப்பு வழங்கப்படுகிறது. இதில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சேர்ந்தவர்களாக உள்ளனர். வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இதில் படித்து பயன்பெறுகின்றனர்.
இந்த வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு வளாக நேர்காணல் மூலமாக புகழ்பெற்ற முன்னணி ஊடக நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த கல்வியாண்டில் இருந்து வடகிழக்கு வளாகத்தில் இந்த ஐஐஎம்சி-யில் டிஜிட்டல் ஊடகம் தொடர்பான முதுநிலை பட்டயப் படிப்பும் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் டிஜிட்டல் ஊடகங்களின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட இந்த படிப்பு இந்த நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்தே இதன் மண்டல இயக்குநராக திரு எல் ஆர் செய்லோ பொறுப்பு வகித்து வருகிறார்.
ஐஐஎம்சி என்பது 1965 ஆம் ஆண்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. ஊடகத்துறையினரில் முன்னேற விரும்புபவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 5 மண்டல வளாகங்களை கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.
**************
SM/PLM/PK/IDS
(Release ID: 1873516)
Visitor Counter : 200