பாதுகாப்பு அமைச்சகம்

பாதுகாப்புத் துறை செயலாளராக திரு கிரிதர் அரமனே பொறுப்பேற்பு

Posted On: 01 NOV 2022 1:00PM by PIB Chennai

ஆந்திர பிரதேச பிரிவில் 1988- ஆம் ஆண்டு அணியைச்சேர்ந்த திரு கிரிதர் அரமனே  பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளராக நவம்பர் 1, 2022 அன்று பொறுப்பேற்றார். பதவியேற்புக்கு முன்பாக புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் திரு அரமனே மலர் வளையம் வைத்து, வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தேசத்தை காக்கும் பணியின் போது, தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு அவர் மரியாதை செலுத்தினார்.

“இந்த துணிச்சல் மிக்க வீரர்களிடமிருந்து நாம் உத்வேகம் பெறுகிறோம். மேலும் இந்தியாவை பாதுகாப்பான மற்றும் வளமான நாடாக மாற்ற வேண்டும் என்ற அவர்களது கனவை நிறைவேற்றுவதற்கு உறுதியேற்று நாம் பணியாற்றுகிறோம்” என்று தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற போது திரு அரமனே கூறினார்.

இந்திய ஆட்சி பணியில் 32 ஆண்டுகால அனுபவத்தில் மத்திய அரசு மற்றும் ஆந்திர மாநில அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது பாதுகாப்புத் துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள அவர் இதற்கு முன்பு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் செயலாளராக பொறுப்பு வகித்தார்.

முன்னதாக அமைச்சரவை செயலகத்தின் கூடுதல் செயலாளராகவும், அவர் பதவி வகித்துள்ளார். இது தவிர, பெட்ரோலியம் மற்றும்  இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் துரப்பண பிரிவிலும், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஆய்வு பிரிவில் பொறுப்பு செயல் இயக்குனராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தின் திரு அரமனே, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் முதன்மை செயலாளராக பணிபுரிந்துள்ளார்.  ஆந்திரப்பிரதேச மாநில நிதி கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும், அந்த மாநில நிதித்துறை செயலாளராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். கம்பம், மற்றும் சித்தூர் மாவட்டங்களின் ஆட்சியராகவும் அவர் இருந்துள்ளார். 

ஹைதராபாத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டுமான பொறியியலில் பி டெக் பட்டம் பெற்ற திரு அரமனே, சென்னை ஐஐடியில் எம்டெக் பட்டமும் பெற்றுள்ளார். வாராங்கல், காக்கதியா பல்கலைக்கழகத்தில் முதுகலை பொருளாதார பட்டத்தையம் திரு அரமனே பெற்றுள்ளார்.

**************

SM/PLM/RS/IDS(Release ID: 1872631) Visitor Counter : 179