பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மனதின் குரல் 94ஆவது பகுதி ஒலிபரப்பு நாள்: 30.10.2022

Posted On: 30 OCT 2022 11:50AM by PIB Chennai

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று தேசத்தின் பல பாகங்களில் சூரிய உபாசனைத் திருநாளான சட் கொண்டாடப்பட்டு வருகின்றது. சட் திருநாளில் பங்கெடுத்துக் கொள்ள இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய கிராமங்கள், தங்கள் இல்லங்கள், தங்களுடைய குடும்பத்தாரிடம் வந்திருக்கின்றார்கள். சட் அன்னை அனைவரின் வளம், அனைவரின் நலம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனையாகும்.

  • நண்பர்களே, சூரிய உபாசனை எனும் பாரம்பரியம், நமது கலாச்சாரம், நமது நம்பிக்கைகள் ஆகியன இயற்கையோடு எத்தனை ஆழமான தொடர்பு கொண்டுள்ளன என்பதற்குச் சான்றாக விளங்குகின்றது. இந்த வழிபாடு வாயிலாக, நமது வாழ்க்கைக்கு சூரியனின் ஒளியின் மகத்துவம் தெளிவாக்கப்பட்டிருக்கின்றது. இதோடு கூடவே, ஏற்ற இறக்கம் என்பவை வாழ்க்கையின் பிரிக்கமுடியாத அங்கங்கள் என்ற செய்தியும் நமக்களிக்கப்பட்டிருக்கிறது. ஆகையாலே, நாம் அனைத்துச் சூழ்நிலைகளிலும் சமநிலையில் இருந்து பழக வேண்டும். சட் அன்னையின் வழிபாட்டின் போது, பலவகையான பழங்கள், டேகுவா தின்பண்டப் பிரசாதம் ஆகியவை படைக்கப்படுகின்றன. இதற்கான விரதமும் கூட எந்தவொரு கடினமான சாதனைக்கு சற்றும் குறைவானது அல்ல. சட் பூஜையின் மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த வழிபாட்டில் எந்தப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றனவோ, இதை சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு மக்கள் இணைந்து தயாரிக்கின்றார்கள். இதில் மூங்கில் தட்டு பயன்படுத்தப்படுகிறது, அகல் விளக்குகளுக்கென்ற தனியொரு மகத்துவம் உண்டு. இதன் வாயிலாக கொண்டைக்கடலை உற்பத்தியாளர்கள், இனிப்புத் தின்பண்டமான பதாஷாவைத் தயாரிக்கும் சிறு தொழில்புரிவோர் சமூகத்தின் மகத்துவம் நிறுவப்படுகிறது. இவர்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால் சட் வழிபாடு நிறைவடைய முடியாது. சட் திருநாளானது நமது வாழ்க்கையில் தூய்மையின் மகத்துவத்தின் மீதும் வலுசேர்க்கிறது. இந்தத் திருநாள் வரும் வேளையில் சமூக அளவில் சாலை, நதி, படித்துறை, நீரின் பல்வேறு ஆதாரங்கள் ஆகியவை தூய்மைப்படுத்தப்படுகின்றன. சட் திருநாளானது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்பதற்கும் ஒரு உதாரணம். இன்று பிஹார் மற்றும் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த மக்கள் தேசத்தின் எந்தவொரு மூலையிலே இருந்தாலும், அங்கே, மிகுந்த கோலாகலத்தோடு சட் வழிபாட்டிற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். தில்லி, மும்பை உட்பட மஹாராஷ்டிரத்தின் பல்வேறு மாவட்டங்கள், குஜராத்தின் பல பாகங்களில் சட்பூஜையைப் பெரிய அளவில் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, முதலில் குஜராத்தில் அந்த அளவுக்கு சட் பூஜை கொண்டாடப்பட்டதில்லை. ஆனால் காலப்போக்கில், இன்று கிட்டத்தட்ட குஜராத் முழுவதையும் சட் பூஜையின் வண்ணங்கள் அலங்கரிக்கின்றன. இதைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இப்போதெல்லாம், அயல்நாடுகளிலும் கூட சட்பூஜை எத்தனை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பற்றிய படங்களை நம்மால் காண முடிகிறது. அதாவது, பாரதத்தின் வளமான பாரம்பரியம், நமது நம்பிக்கைகள், உலகின் பல்வேறு மூலைகளிலும் தங்களுக்கான அடையாளத்தை அதிகரித்து வருகின்றன. இந்தப் பெருநாளில் பங்கெடுக்கும் அனைத்து பக்தர்களுக்கும் என்னுடைய பலப்பல நல்வாழ்த்துக்கள்.
  • எனதருமை நாட்டுமக்களே, இதுவரை நாம் பவித்திரமான சட்பூஜை பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம், பகவான் சூரியனின் வழிபாடு பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். சரி, சூரிய வழிபாட்டோடு கூடவே, அந்தச் சூரியன் அளிக்கும் நல்வரங்கள் பற்றியும் பேசலாமே! சூரிய தேவன் அளிக்கும் வரம் தான் சூரியசக்தி. இந்த சூரிய சக்தி என்பது எப்படிப்பட்ட விஷயம் என்றால், ஒட்டுமொத்த உலகும் தனது எதிர்காலமாக இதைப் பார்க்கிறது, நம் பாரத நாட்டைப் பொறுத்த மட்டிலே, சூரியதேவன் வழிபடு தெய்வம் மட்டுமல்ல, வாழ்க்கைமுறையின் மையமாகவும் இருந்து வந்திருக்கிறார். பாரதம் இன்று தனது பாரம்பரியமான அனுபவங்களை நவீன விஞ்ஞானத்தோடு இணைத்து வருகின்ற வேளையில், இன்று நாம் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயார் செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக இடம் பெற்றிருக்கிறோம். சூரியசக்தியால் நமது தேசத்தின் ஏழைகள் மற்றும் மத்தியத்தட்டின் வாழ்க்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது என்பதும் ஆய்வுக்குரிய விஷயம்.
  • தமிழ்நாட்டில், காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு விவசாயி கே. எழிலன் அவர்கள். இவர், பிரதம மந்திரி குசும் திட்டத்தினால் ஆதாயம் அடைந்தார், தனது வயலில் பத்து குதிரைசக்தியுடைய சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டைப் பொருத்தினார். இப்போது இவர் தனது வயலுக்காக மின்சாரத்துக்கான செலவு செய்ய வேண்டியிருக்கவில்லை. வயலில் நீர்ப்பாசனத்திற்காக இப்போது இவர் அரசின் மின்வழங்கலையும் சார்ந்திருக்கவில்லை. இதே போல இராஜஸ்தானின் பரத்பூரிலும் பிரதம மந்திரி குசும் திட்டத்தினால் பயனடைந்த மேலும் ஒரு பயனர் விவசாயி கமல்ஜி மீணா அவர்கள். கமல்ஜி தனது வயலுக்கு சூரியசக்தியால் இயங்கும் பம்பினைப் பொருத்தினார், இது இவரது செலவினைக் குறைத்தது. செலவு குறைவானதால், வருமானத்தில் அதிகரிப்பு. சூரியசக்தியால் மேலும் பல சிறுதொழில்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் கமல்ஜி. இவருடைய பகுதியில், மரவேலை உண்டு, பசுஞ்சாணத்தால் தயாரிக்கப்படும் பொருள்களின் தொழில் உண்டு, இவற்றிலும் சூரியசக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது, இவர் 10-12 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்து வருகிறார். அதாவது குசும் திட்டத்தால் கமல்ஜி ஏற்படுத்தி வைத்த தொடக்கம், அதன் மணம், பலரின் வாழ்விலே மலர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

          நண்பர்களே, மாதம் முழுவதும் மின்சாரத்தைப் பயன்படுத்திய பிறகு உங்களுக்கு மின்சார ரசீது வருவதற்கு பதிலாக, மின்சாரத்திற்காக உங்களுக்குப் பணம் வரும் என்ற வகையில் நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்ததுண்டா? சூரியசக்தியானது இதையும் செய்து காட்டியிருக்கிறது. சில நாட்கள் முன்பாக, தேசத்தின் முதல் சூரிய கிராமமான, குஜராத்தைச் சேர்ந்த மோடேரா பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள். மோடேரா சூரிய கிராமத்தின் பெரும்பான்மையான வீடுகள், சூரியசக்தியை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டன. இப்போது அங்கே பல வீடுகளில், மாதத்தின் இறுதியில் மின்சாரத்திற்கான ரசீது வருவதில்லை, மாறாக, மின்சாரம் ஏற்படுத்திக் கொடுத்த வருமானத்திற்கான காசோலை தான் வருகின்றது. இதைப் பார்த்த பிறகு, இப்போது தேசத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்கள் கிராமத்தையும் சூரியசக்தி கிராமமாக மாற்றித் தர வேண்டும் என்று கடிதங்கள் எழுதுகிறார்கள். அதாவது, பாரதத்திலே சூரியசக்தி கிராமங்களின் நிறுவல் என்பது ஒரு மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாறக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை, இதனை மோடேரா கிராமவாசிகள் தொடங்கி வைத்திருக்கிறார்கள்.

          வாருங்கள், மனதின் குரலின் நேயர்களை, மோடேரா மக்களோடு இணைக்கலாம். நம்மோடு இப்போது தொலைபேசியில் இணைந்திருப்பவர், விபின்பாய் படேல் அவர்கள்.

பிரதமர்: விபின்பாய் வணக்கம்! இப்போது மோடேரா கிராமத்தைப் பற்றி தேசம் முழுவதும், ஒரு மாதிரி என்ற வகையிலே பேசி வருகிறது. ஆனால் உங்களுடைய உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் கேட்கும் போது, நீங்கள் அவர்களுக்கு என்ன கூறுகிறீர்கள், என்ன ஆதாயம் அடைஞ்சீங்க?

விபின் ஜி: சார், ஆளுங்க என்கிட்ட கேட்கும் போது நான் சொல்லுவேன், முதல்ல எல்லா சின்ன அளவுல தான் பில் வரத் தொடங்கிச்சு, பிறகு இப்ப சுத்தமா பூஜ்யம் தான் பில் வருது, சில சமயம் 70 ரூபாய் வரும், ஆனா எங்க கிராமம் முழுசுலயும் பொருளாதார நிலை மேம்பாடு அடைஞ்சிட்டு வருது.

பிரதமர்: அதாவது ஒரு வகையில, முன்ன மின்சார பில் பத்தி இருந்த கவலை இப்ப இல்லை, இல்லையா?

விபின் ஜி: ஆமாம் சார். இது என்னவோ உண்மைங்க. இப்ப எல்லாம் கிராமம் மொத்தத்துக்குமே எந்த டென்ஷனும் கிடையாது. சார் செஞ்சது ரொம்பவே நல்லதுன்னு எல்லாருமே இப்ப சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. ரொம்ப சந்தோசமா இருக்குங்க. எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு.

பிரதமர்: இப்ப உங்க வீட்டிலேயே மின்சாரத் தொழிற்சாலைக்கு முதலாளி ஆயிட்டீங்க. உங்க வீட்டுக் கூரையிலேயே மின்சாரம் உற்பத்தி ஆயிட்டு இருக்கு,

விபின் ஜி: ஆமாங்கய்யா, சரியாச் சொன்னீங்க.

பிரதமர்: சரி, இந்த மாற்றம் உங்க கிராமத்து மக்கள் கிட்ட என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கு?

விபின் ஜி: ஐயா, ஒட்டுமொத்த கிராமவாசிகளும் விவசாயம் செய்யறாங்க. முன்ன மின்சாரம் ஒரு சிக்கலா இருந்திச்சு, இப்ப அதிலேர்ந்து விடுதலை கிடைச்சுப் போச்சு. மின்சாரத்துக்கான பில்லையும் கட்ட வேண்டாம், கவலையே இல்லாம இருக்கலாம்யா.

பிரதமர்: அப்படீன்னா, மின்சாரத்துக்கான பில்லும் இல்லை, வசதிகளும் அதிகமாயிருச்சு, சரியா?

விபின் ஜி: ஐயா, சிக்கல் போச்சுங்கறது ஒரு பக்கம்; நீங்க இங்க வந்த போது 3டி காட்சியை தொடங்கி வச்சதுக்குப் பிறகு மோடேரா கிராமமே வேற லெவலுக்கு போயிருச்சுங்கய்யா. பிறகு ஒரு செயலர்னு யாரோ ஒருத்தர் வந்தாருய்யா….

பிரதமர்: சரி, சரி.

விபின் ஜி: அப்புறமா எங்க கிராமமே பிரபலமாயிருச்சுய்யா.

பிரதமர்: ஆமா, ஆமா, ஐ.நா.வோட செக்ரட்டரி ஜெனரல், அவரே இங்க வர விருப்பம் தெரிவிச்சாரு. இத்தனை பெரிய வேலை செஞ்சிருக்கீங்க, நானே அங்க போயி பார்க்க விரும்பறேன்னாரு. சரி விபின் பாய், உங்களுக்கும், உங்க கிராமத்து மக்களுக்கும், என் தரப்பிலிருந்து பலப்பல நல்வாழ்த்துக்கள், உலகம் முழுவதும் உங்க கிட்டேர்ந்து உத்வேகம் அடையுது, இந்த சூரியசக்தி இயக்கம் வீடுதோறும் செயல்படணும்.

விபின் ஜி: ரொம்ப நல்லது ஐயா, இதை எல்லாத்துக்கிட்டயும் சொல்றோங்கய்யா, எல்லாரும் சூரியசக்தியைப் பயன்படுத்துங்க, உங்களுக்குப் பணம் மிச்சமாகும்ன்னு சொல்றோங்கய்யா.

பிரதமர்: ஆமா, மக்களுக்குப் புரிய வையுங்க. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள், நன்றி சகோதரா.

விபின் ஜி: நன்றிங்கய்யா, உங்களோட பேசினதே எனக்குப் பெரிய வரப்பிரசாதம்யா.

விபின் பாயிக்கு பலப்பல நன்றிகள்.

வாருங்கள், இப்போது மோடேரா கிராமத்தின் வர்ஷா பேனிடம் பேசிப் பார்க்கலாம்.

வர்ஷாபேன்: ஹெலோ வணக்கம் ஐயா!

பிரதமர்: வணக்கம் வர்ஷா பேன். எப்படி இருக்கீங்க?

வர்ஷாபேன்: ரொம்ப நல்லா இருக்கேங்க. நீங்க எப்படி இருக்கீங்க?

பிரதமர்: நான் நல்லா இருக்கேம்மா.

வர்ஷா பேன்: உங்க கூட பேசறது பெரிய பேறுங்கய்யா.

பிரதமர்: நல்லது வர்ஷாபேன்.

வர்ஷாபேன்: சொல்லுங்கய்யா.

பிரதமர்: நீங்க மோடேராவில இருக்கீங்க, ஒரு முன்னாள் இராணுவ வீரரோட குடும்பத்தைச் சேர்ந்தவங்க, சரியா?

வர்ஷாபேன்: நான் இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவ. என் கணவர் முன்னாள் இராணுவ வீரர் ஐயா.

பிரதமர்: முன்ன இந்தியாவுல எந்த இடங்களுக்கு எல்லாம் போயிருக்கீங்க?

வர்ஷாபேன்: முதல்ல இராஜஸ்தான் போயிருக்கேன், பிறகு காந்திநகர், பிறகு கச்ரா கஞ்ஜோர் ஜம்முவுக்கு போயிருக்கேன், அங்க அவர்கூட இருந்தும் இருக்கேன். அங்க ரொம்ப வசதியா இருந்திருக்குங்கய்யா.

பிரதமர்: சரி, இராணுவத் தொடர்புல இருந்ததால ஹிந்தியும் நல்லாவே பேசறீங்களோ?

வர்ஷாபேன்: ஆமா ஆமா. நான் கத்துக்கிட்டேன்யா.

பிரதமர்: சரி, மோடேராவுல இத்தனை பெரிய மாற்றம் வந்திருக்கு, இங்க சூரியசக்திக் கருவிகள் கூரைப்பகுதியில பொருத்தப்பட்டிருக்கு. மொதல்ல மக்கள் பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்ட போது உங்க மனசுல என்ன தோணிச்சு, என்ன பெரிய மின்சாரம் வந்துடப் போகுது, இது தேவையில்லாத வேலைன்னு பட்டுதா? இப்ப உங்க அனுபவம் என்னவா இருக்கு? இதனால ஆதாயம் ஏற்பட்டிருக்கா?

வர்ஷாபேன்: ரொம்ப ரொம்ப ஆதாயம் ஏற்பட்டிருக்குய்யா. ஐயா, எங்க கிராமத்தில தினம்தினம் உங்களால நாங்க தீபாவளி கொண்டாடிக்கிட்டு இருக்கோம். 24 மணிநேரமும் எங்களுக்கு மின்சாரத்துக்குக் குறைவே இல்லை, மின்சாரப் பயன்பாட்டுக்கான ரசீது சுத்தமா வர்றதே கிடையாது. எங்க வீட்டுல நாங்க எல்லா பொருட்களையும் மின்பொருட்களாத் தான் வச்சிருக்கோம், எல்லாத்தையும் பயன்படுத்திட்டு இருக்கோம்னா அதுக்கு நீங்க தான் காரணம். சுத்தமா பில்லே வராது, எந்தக் கவலையும் இல்லாம பயன்படுத்திக்கலாம்.

பிரதமர்: இதெல்லாம் சரி, நீங்க அதிகமா மின்சாரத்தைப் பயன்படுத்திக்கணும்ங்கற முடிவுல இருக்கீங்க இல்லையா!

வர்ஷாபேன்: ஆமாங்கய்யா. இப்ப எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை, நாங்க எந்தக் கவலையும் இல்லாம பயன்படுத்திக்கலாம், வாஷிங் மெஷினாகட்டும், ஏசியாகட்டும், எல்லாத்தையும் பயன்படுத்திக்கலாம்.

பிரதமர்: சரி, கிராமத்தைச் சேர்ந்த மத்தவங்கல்லாம் இதனால சந்தோஷமா இருக்காங்களா?

வர்ஷாபேன்: ரொம்ப ரொம்ப சந்தோஷப்படுறாங்கய்யா.

பிரதமர்: ஆமா, உங்க கணவர் அங்க இருக்கற சூரியனார் கோயில்ல வேலை பார்க்கறாரில்லையா? அங்க நடைபெற்ற லைட் ஷோ, இத்தனை பெரிய நிகழ்ச்சிக்குப் பிறகு உலகம் முழுக்கவிருந்தும் விருந்தாளிங்க வர்றாங்க இல்லையா?

வர்ஷாபேன்: உலகம் முழுக்கலேர்ந்தும் அயல்நாட்டுக்காரங்க எப்படி வராம இருப்பாங்க? நீங்க தான் எங்க கிராமத்தை உலகப் பிரசித்தி உடையதா ஆக்கிட்டீங்க இல்ல?

பிரதமர்: அப்படீன்னா உங்க கணவருக்கும் வேலை அதிகமாயிருக்கும், விருந்தாளிங்க அங்க கோயிலைப் பார்க்கவும் வருவாங்க.

வர்ஷாபேன்: அட! வேலை எத்தனை அதிகமானாலும் கவலை இல்லைங்க, இது எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. நாங்க விரும்பறது எல்லாம் தொடர்ந்து எங்க கிராமத்தை நீங்க முன்னேத்திக்கிட்டே போகணுங்கறது தான்.

பிரதமர்: இப்ப கிராமத்தோட முன்னேற்றத்தை நாம இணைஞ்சு செய்யணும்.

வர்ஷாபேன்: ஆமா ஆமா. ஐயா, நாங்க உங்களுக்குத் துணை நிக்கறோம்.

பிரதமர்: நான் மோடேராவாசிகளை பாராட்டறேன், ஏன்னு சொன்னா, கிராமம் முழுக்க இதை ஏத்துக்கிட்டாங்க, அவங்க வீடுகள்ல மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியுங்கறது மேல அவங்க நம்பிக்கை வச்சாங்க.

வர்ஷாபேன்: 24 மணிநேரம்யா. எங்க வீட்டில 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்குது, ரொம்ப சந்தோஷமா இருக்கு.

பிரதமர்: சரிம்மா. உங்களுக்கு பலப்பல நல்வாழ்த்துக்கள். மிச்சப்படுற பணத்தை வச்சு பிள்ளைங்க நலனுக்குப் பயனாகற வகையில செலவு செய்யுங்க. அந்தப் பணம் நல்லவிதமா செலவாகணும், அதனால உங்க வாழ்க்கை மேம்படணும். உங்களுக்குப் பலப்பல நல்வாழ்த்துக்கள். மேலும் அனைத்து மோடேராவாசிகளுக்கும் என்னுடைய வணக்கங்கள்!!

  • , வர்ஷாபேன், விபின்பாய் ஆகியோர் கூறியது நாடு முழுமைக்கும், கிராமங்கள்-நகரங்களுக்குமான ஒரு உத்வேகக் காரணி. மோடேராவின் இந்த அனுபவத்தை தேசம் நெடுக நம்மால் கொண்டு செல்ல முடியும். சூரியசக்தி, இப்போது பணத்தையும் மிச்சப்படுத்தும், வருவாயையும் பெருக்கும். ஜம்மு-கஷ்மீரத்தின் ஸ்ரீநகரிலே ஒரு நண்பர், மன்சூர் அஹமத் லஹர்வால். கஷ்மீரத்தின் குளிர் காரணமாக மின்சாரம் கணிசமாகச் செலவாகிறது. இதனால் மன்சூர் அவர்களின் மின்சாரப் பயன்பாட்டிற்காக 4000 ரூபாய்க்கும் அதிகமாக ரசீது வந்து கொண்டிருந்தது; ஆனால் மன்சூர் அவர்கள் தனது வீட்டின் கூரையிலே சூரியசக்திக் கருவியைப் பொருத்தியபிறகு, அவருடைய செலவினம் பாதியையும் விடக் குறைந்து விட்டது. இதே போல, ஒடிஷாவின் ஒரு பெண், குன்னீ தேவுரீயும் சூரியசக்தி மூலம் தனது சகப் பெண்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். குன்னீ, ஒடிஷாவின் கேந்துஜர் மாவட்டத்தின் கர்தாபால் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினப் பெண்களுக்கு, சூரியசக்தியால் இயங்கும் ரீலிங் கருவியின் துணைக்கொண்டு பட்டு நெசவுப் பயிற்சி அளித்து வருகிறார். சூரியசக்திக் கருவி காரணமாக இந்தப் பழங்குடியினப் பெண்களுக்கு மின்கட்டணச் செலவின் சுமை இருப்பதில்லை, அவர்களுக்கு வருமானமும் உண்டாகிறது. இது தான் சூரியதேவனின் சூரியசக்தியின் வரப்பிரசாதமாகும். வரமும், பிரசாதமும் எத்தனை பரவலானவையாக இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை நல்லதாகவும் இருக்கும். ஆகையால், நீங்களும் இதிலே இணைந்து கொள்ளுங்கள், மற்றவர்களையும் இணையுங்கள் என்பதே நான் உங்களிடம் வைக்கும் வேண்டுகோள்.

எனக்குப் பிரியமான நாட்டுமக்களே, இதுவரை நான் உங்களிடம் சூரியனைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இப்போது எனது கவனம் விண்வெளியின்பால் செல்கிறது. ஏனென்றால், நம்முடைய தேசம் சூரியசக்தித் துறையோடு கூடவே, விண்வெளித்துறையிலும் அற்புதங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் இன்று, பாரதத்தின் சாதனைகளைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது. ஆகையால் நான் நினைத்தேன், மனதின் குரலின் நேயர்களிடம் இதைச் சொன்னால் அவர்களுக்கும் சந்தோஷம் ஏற்படுமே என்று இதனைப் பகிர்கிறேன்.

  • , பாரதம் ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்களை, சில நாட்கள் முன்பாக விண்ணில் ஏவியதை நீங்களே கவனித்திருக்கலாம். தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகக் கிடைத்த இந்த வெற்றி, ஒருவகையில் நமது இளைஞர்கள் தேசத்திற்கு அளித்த சிறப்பு தீபாவளிப் பரிசு என்று கொள்ளலாம். இந்த ஏவுதல் காரணமாக, கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையும், கட்ச் முதல் கோஹிமா வரையும், ஒட்டுமொத்த தேசத்திலும் டிஜிட்டல் இணைப்புத் திசையில் பலம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் துணையோடு, மிகவும் தொலைவான பகுதிகளையும் தேசத்தின் பிற பாகங்களோடு எளிதாக இணைத்து விடலாம். தேசம் தற்சார்பு உடையதாக ஆகும் போது, எப்படி வெற்றியின் புதிய உச்சங்களைத் தொட முடிகிறது என்பதற்கான எடுத்துக்காட்டும் கூட இது. உங்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் வேளையில், மிகப் பழைய விஷயம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. அதாவது பாரதத்திற்கு க்ரையோஜெனிக் ராக்கெட் தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட காலம். ஆனால் பாரதத்தின் விஞ்ஞானிகள், உள்ளூர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தியது மட்டுமல்லாமல், இன்று இதன் உதவியால் ஒரே நேரத்தில் பலடஜன் செயற்கைக்கோள்களை அனுப்பவும் முடிந்திருக்கிறது. இந்த ஏவுதலோடு கூடவே, பாரதம் உலகளாவிய வர்த்தகச் சந்தையில் ஒரு பலமான சக்தி என்று ஆகி இருக்கிறது, இது விண்வெளித்துறையில் பாரதத்திற்குப் புதிய கதவுகளையும் திறந்து விட்டிருக்கிறது.
  • , வளர்ந்த பாரதம் என்ற சங்கல்பத்தை மனதில் ஏந்தி நாம் பயணிக்கிறோம், அனைவரின் முயற்சியாலும், நமது இலக்குகளை நம்மால் அடைய முடியும். பாரதத்தில் விண்வெளித்துறையில் முதலில் அரசு அமைப்புகள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டிருந்தன, பாரதத்தின் தனியார் துறைக்கு இதைத் திறந்து விட்ட பிறகு இதிலே புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பாரதநாட்டுத் தொழில்துறையும், ஸ்டார்ட் அப்புகளும் இந்தத் துறையில் புதியபுதிய கண்டுபிடிப்புக்களையும், புதியபுதிய தொழில்நுட்பங்களையும் புகுத்துவதில் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, IN-SPACe இன் துணையோடு, இந்தத் துறையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன. IN-SPACe வாயிலாக, அரசுசாரா நிறுவனங்களும் கூட, தங்களுடைய தாங்கு சுமைகளையும், செயற்கைக்கோள் ஏவுதல்களையும் புரிய வசதி கிடைத்து வருகிறது. விண்வெளித்துறையில் பாரதத்தில் உருவாகி வரும் இந்தப் பெரிய சந்தர்ப்பங்களை முழுமையாகப் பயன்படுத்தி லாபம் அடையுங்கள் என்று, அதிகமான புதிதாகத் தொழில் தொடங்குவோரிடமும், புதுமையாக்கம் செய்பவர்களிடமும் வேண்டிக் கொள்கிறேன்.

என் மனம்நிறை நாட்டுமக்களே, மாணவர்கள் பற்றிய பேச்சு வரும் போது, இளைஞர்கள் பற்றிப் பேசும் போது, தலைமைப்பண்பு பற்றிய பேச்சு எழும் போது, நமது மனதில் ஊறியிருக்கும், பழைய, பல கருத்துக்களும், எண்ணங்களும் இடம் பெற்றிருக்கின்றன. மாணவர்கள் சக்தி என்று பேசும் போது, இதை மாணவர் சங்கத் தேர்தல்களோடு மட்டுமே குறுக்குவதை நாம் பல முறை பார்க்கிறோம். ஆனால் மாணவர் சக்தி என்பதன் வீச்சு மிகப்பெரியது, மிகவும் பரந்துபட்டது. மாணவர்சக்தி என்பது பாரதத்தை சக்தி படைத்ததாக ஆக்கும் ஆதாரம். இன்றைய இளைஞர்கள் தாம், பாரதத்தை 2047ஆம் ஆண்டுக்கு இட்டுச் செல்லக்கூடியவர்கள். சுதந்திர பாரதம் தனது நூற்றாண்டைக் கொண்டாடும் போது, இளைஞர்களின் இந்தச் சக்தி, அவர்களின் உழைப்பு, அவர்களின் வியர்வை, அவர்களின் திறமைகள், பாரதத்தை எந்த உயரத்திற்குக் கொண்டு சேர்க்குமோ, அந்த உறுதிப்பாட்டைத் தான் தேசம் இன்று எடுத்துக் கொண்டு வருகிறது. நமது இன்றைய இளைஞர்கள், எந்த வகையில் செயலாற்றி வருகிறார்களோ, தேசத்தைக் கட்டமைப்பதில் இணைந்திருக்கின்றார்களோ, இதைக் காணும் போது என் மனதில் மிகுந்த நம்பிக்கை பிறக்கிறது. எந்த வகையில் நமது இளைஞர்கள் ஹேக்கத்தான்களில், அதாவது கணினி நிரலாக்கங்களைக் கூட்டாகச் செயல்பட்டுச் சிக்கல்களைத் தீர்க்கிறார்களோ, இரவுமுழுக்க கண்விழித்து, மணிக்கணக்காகப் பணியாற்றுகிறார்களோ, இதையெல்லாம் காணும் போது மிகுந்த உத்வேகம் உதிக்கிறது. கடந்த ஆண்டுகளில் நடந்த கணினி நிரலாக்கங்களைக் கூட்டாகச் செய்வதில் தேசத்தின் இலட்சக்கணக்கான இளைஞர்கள் இணைந்து, பலப்பல சவால்களைத் தீர்த்திருக்கிறார்கள், தேசத்திற்குப் புதிய தீர்வுகளை அளித்திருக்கின்றார்கள்.

நண்பர்களே, நான் செங்கோட்டையிலிருந்து ஜய் அனுசந்தான், அதாவது ஜய் ஆராய்ச்சிகள் என்ற அறைகூவலை விடுத்திருந்தேன் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த தசாப்தத்தை பாரதத்தின் தசாப்தமாக ஆக்கும் விஷயம் குறித்துப் பேசியிருந்தேன். இதற்கான பொறுப்பை நமது தொழில்நுட்பக் கழகங்கள், ஐ.ஐ.டிக்களின் மாணவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாதம் அக்டோபர் 14-15இலே, அனைத்து 23 இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் தங்களுடைய கண்டுப்பிடிப்புகள் மற்றும் ஆய்வுச் செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்த, முதன்முறையாக ஒரு மேடையில் குழுமினார்கள். இந்தக் கூட்டத்தில் நாடெங்கிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களும், ஆய்வாளர்களும் 75க்கும் மேற்பட்ட மிகச் சிறப்பான செயல்திட்டங்களைக் காட்சிப்படுத்தினார்கள். ஆரோக்கியப் பராமரிப்பு, விவசாயம், ரோபாட்டிக்குகள், குறைக்கடத்திகள், 5ஜி, அதாவது ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை தகவல்தொடர்புகள், இப்படி ஏராளமான ஆய்வுப் பொருள்களில் இந்தச் செயல்திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்தச் செயல்திட்டங்கள் அனைத்தும் ஒன்றை விட மற்றது சிறப்பானவையாக இருந்தாலும், நான் சில செயல்திட்டங்களை மட்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். எடுத்துக்காட்டாக, ஐ.ஐ.டி புவனேஸ்வரின் ஒரு குழு, எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய வெண்டிலேட்டரை பிறந்த சிசுவிற்காக மேம்படுத்தியிருக்கிறார்கள். இது பேட்டரியில் இயங்குகிறது, தொலைவான இடங்களில் கூட இதனைப் பயன்படுத்த இயலும். குறித்த காலத்திற்கு முன்பே பிறந்துவிடும் அந்த சிசுக்களின் உயிரைக் காக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மின்சார வாகனங்களாகட்டும், ஆளில்லாமல் வானில் பறக்கும் கருவிகளின் தொழில்நுட்பமாகட்டும், ஐந்தாம் தலைமுறை அலகற்றையாகட்டும், நமது பல மாணவர்கள், இவற்றோடு தொடர்புடைய புதிய தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வருவதில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் இணைந்து ஒரு பன்மொழி செயல்திட்டத்தின் மீது பணியாற்றி வருகின்றார்கள், இது மாநில மொழிகளைக் கற்கும் வழிமுறையை எளிமைப்படுத்தி வருகின்றது. இந்தச் செயல்திட்டம் புதிய தேசியக் கல்விக் கொள்கை, அதன் இலக்குகளை எட்டவும் மிகவும் பயனுடையதாக இருக்கும். ஐஐடி மதராஸும், ஐஐடி கான்பூரும் இணைந்து பாரதத்தின் சுதேசி ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை சோதனைக் களத்தைத் தயார் செய்திருப்பதில் முதன்மை பங்களிப்பை ஆற்றியிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு மிகுந்த மகிழ்வை அளிக்கலாம். கண்டிப்பாக இது ஒரு பிரமாதமான தொடக்கம் என்பதில் ஐயமில்லை. இனிவரும் காலத்தில் இதைப் போன்ற, மேலும் பல முயற்சிகள் கண்டிப்பாகக் காணக் கிடைக்கும். அதே போல ஐஐடிக்களின் கருத்தூக்கத்தாலே உந்தப்பட்டு, பிற நிறுவனங்களும் ஆய்வு மற்றும் மேம்பாட்டோடு தொடர்புடைய தங்களின் செயல்பாடுகளில் வேகத்தைக் கூட்டுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

  • கனிவான நாட்டுமக்களே, சுற்றுச்சூழல் புரிந்துணர்வு பது நமது சமூகத்தின் ஒவ்வொரு அணுவிலும் நீக்கமற நிறைந்திருப்பது, இதை நாம் நமது நாலாபுறங்களிலும் உணர்ந்தும் வருகிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்திருக்கும் மனிதர்களுக்கும் இங்கே குறைவில்லை.

கர்நாடகத்தின் பெங்களூரூவில் வசிக்கும் சுரேஷ் குமாரிடத்திலும் கூட நாம் பல விஷயங்களைக் கற்க முடியும்; இவரிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக மிகப்பெரும் வேகம் இருக்கிறது. 20 ஆண்டுகள் முன்பாக, இவர் நகரத்தின் சஹகார்நகரான புறநகர்ப்பகுதியின் ஒரு காட்டினை மீண்டும் பசுமை நிறைந்த ஒன்றாக ஆக்குவேன் என்ற உறுதியை மேற்கொண்டார். இந்தப் பணி சிரமங்கள் நிறைந்தது தான் என்றாலும், 20 ஆண்டுகள் முன்பே நடப்பட்ட செடிகள் இன்று 40 அடி உயரம் வளர்ந்து விசாலமானவையாக ஆகி விட்டிருக்கின்றன. இப்போது இதன் அழகு அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொள்கிறது. சுரேஷ் குமார் அவர்கள், மேலும் ஒரு அற்புதமான பணியையும் செய்கிறார். இவர் கன்னட மொழி மற்றும் சம்ஸ்கிருதத்திற்கு ஊக்கமளிக்கும் வகையிலே சஹகார்நகரில் ஒரு பேருந்து நிறுத்துமிடத்தை உருவாக்கி இருக்கிறார். இவர் பல்லாயிரம் மக்களுக்குக் கன்னடத்தில் எழுதப்பட்டிருக்கும் செப்புத் தகடுகளையும் பரிசளித்திருக்கிறார். சூழலியல், கலாச்சாரம் – இரண்டும் ஒன்றாக வளர வேண்டும், மலர வேண்டும். இதுவே அவர் எண்ணம்….. எத்தனை அருமையான விஷயம் பார்த்தீர்களா!!

நண்பர்களே, இன்று சூழலுக்கு நேசமான வாழ்கை மற்றும் சூழலுக்கு இணக்கமான பொருள்கள் தொடர்பாக மக்களிடம், முன்பை விட அதிக அளவில் விழிப்புணர்வு தென்படுகிறது. தமிழ்நாட்டின் இப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான முயல்வு பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த அருமையான முயற்சி, கோயம்புத்தூரின் ஆனைக்கட்டியில் இருக்கும் பழங்குடியினப் பெண்களின் ஒரு குழுவினுடையது. ஏற்றுமதி செய்யப்பட, சூழலுக்கு இணக்கமான மண்ணால் ஆன பத்தாயிரம் தேநீர் கோப்பைகளை இந்தப் பெண்கள் உருவாக்கினார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த மண்ணாலான தேநீர்க் கோப்பைகளைத் தயாரிக்கும் பொறுப்பினை, இந்தப் பெண்கள் தாங்களே ஏற்படுத்திக் கொண்டார்கள். களிமண் கலவை தொடங்கி, இறுதிக்கட்ட பேக்கேஜிங் வரை அனைத்து வேலைகளையும் இவர்களே செய்தார்கள். இதற்காக இவர்கள் பயிற்சியும் பெற்றார்கள். இந்த அற்புதமான முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

  • , திரிபுராவின் சில கிராமங்களும் கூட பெரிய ஒரு கற்பித்தலை அளித்திருக்கின்றன. நீங்கள் பயோ கிராமம் பற்றிக் கண்டிப்பாக கேள்விப்பட்டிருப்பீர்கள்; ஆனால் திரிபுராவின் சில கிராமங்கள், பயோ கிராமம் 2 என்ற படிநிலையை எட்டி இருக்கின்றன. பயோ கிராமம் 2இலே, இயற்கைப் பேரிடர்க்காலங்களில் உண்டாகும் இழப்புக்களை எப்படிக் குறைக்கலாம் என்ற கோணத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதிலே பல்வேறு உபாயங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கைமுறையை, மேலும் சிறப்பாக ஆக்குவதில் முழுமையான கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. சூரியசக்தி, இயற்கை எரிவாயு, தேனீ வளர்ப்பு, உயிரி உரங்கள் ஆகிய அனைத்தின் மீதும் கவனம் செலுத்தப்படுகிறது. மொத்தத்தில் பார்த்தால், நீர்-காற்று மாற்றத்திற்கு எதிரான இயக்கத்திற்கு, பயோ கிராமம் 2, மிகுந்த வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. தேசத்தின் பல பாகங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக அதிகரித்துவரும் உற்சாகத்தைக் காணும் போது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சில நாட்கள் முன்பு, பாரதத்திலே, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அர்ப்பணிக்கப்பட்ட Mission Life தொடங்கப்பட்டிருக்கிறது. Mission Life இன் நேரடிக் கோட்பாடு, சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத வாழ்க்கைமுறைக்கு ஊக்கமளித்தல் தான். நீங்களும் கூட Mission Lifeஐத் தெரிந்து கொள்ளுங்கள், இதைப் பின்பற்றும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

நண்பர்களே, நாளை, அக்டோபர் 31ஆம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு தினம், சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் பிறந்த நாள். இந்த நாளன்று தேசத்தின் பல்வேறு இடங்களிலும் ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஓட்டம், தேசத்தில் ஒற்றுமை இழையைப் பலப்படுத்துகிறது, நமது இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. சில நாட்கள் முன்னர், இதே போன்ற உணர்வு, நமது தேசிய விளையாட்டுக்களில் காணக் கிடைத்தது. இணையும் இந்தியா, வெல்லும் இந்தியா என்ற கருத்தோடு, தேசிய விளையாட்டுக்கள் ஒற்றுமை தொடர்பான பலமான செய்தியை அளித்த வேளையில், பாரதத்தின் விளையாட்டுக் கலாச்சாரத்திற்கு ஊக்கமளிக்கும் பணியையும் செய்தது. பாரதத்தின் தேசிய விளையாட்டுக்களில் இதுவரையிலான மிகப்பெரிய ஏற்பாடாக இது அமைந்திருந்தது. இதிலே 36 விளையாட்டுக்கள் இடம் பெற்றிருந்தன, இவற்றிலே, 7 புதிய மற்றும் 2 சுதேசிப் போட்டிகளான யோகாசனம் மற்றும் மல்லகம்பமும் இடம் பிடித்தன. தங்கப் பதக்கங்களை வெல்வதில், முதன்மையாக மூன்று அணிகள் இருந்தன – முப்படையினர் அணி, மஹாராஷ்டிரம், ஹரியாணா அணிகள். இந்த விளையாட்டுக்களில் ஆறு தேசிய சாதனைகளும், கிட்டத்தட்ட 60 தேசிய விளையாட்டுக்களின் பதிவுகளும் உருவாக்கப்பட்டன. பதக்கங்களை வென்றவர்கள், புதிய சாதனைகளைப் படைத்தவர்கள், இந்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் என அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பலப்பல பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன். நான் இந்த விளையாட்டு வீரர்களின் பொன்னான எதிர்காலத்திற்காகவும் என் நல்விருப்பங்களைத் தெரிவிக்கிறேன்.

  • , குஜராத்தில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தளித்த அனைவருக்கும் என் இதயபூர்வமான பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன். குஜராத்திலே தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற போது நவராத்திரி நடந்து வந்தது என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இந்த விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டிற்கு முன்பாக, இந்த சமயத்திலே கொண்டாட்டங்களில் மக்கள் ஈடுபட்டு வரும் வேளையில் எப்படி அவர்களால் இதைக் கண்டுகளிக்க முடியும் என்றும் கூட ஒரு முறை என் மனதில் தோன்றியது. இத்தனை பெரிய ஏற்பாடு ஒருபுறம், மற்றொரு புறமோ நவராத்திரியின் கர்பா போன்ற ஏற்பாடுகள். இத்தனையையும் எப்படி குஜராத்தால் ஒரே வேளையில் செய்ய முடியும்? ஆனால் குஜாராத் மக்கள், தங்களுடைய விருந்தோம்பல் பண்பை அடியொற்றி, அனைத்து விருந்தினர்களையும் குஷிப்படுத்தி விட்டார்கள். அஹ்மதாபாதில் நடந்த தேசிய விளையாட்டுப் போட்டிகளிலே எந்த வகையில் கலையும் விளையாட்டுக்களும் உடைய கலாச்சாரத்தின் சங்கமம் நடந்ததோ, அது பேருவகையை ஏற்படுத்தியது. விளையாட்டு வீரர்களும் பகல் பொழுதில் விளையாட்டுக்களில் பங்கெடுத்தார்கள், இரவிலே கர்பாவும், டாண்டியாவும் அளித்த வண்ணங்களில் மூழ்கித் திளைத்தார்கள். அவர்கள் குஜராத்தி உணவு மற்றும் நவராத்திரியின் காட்சிகளை, சமூக ஊடகங்களிலே தரவேற்றமும் செய்தார்கள். பார்த்தவர்கள் அனைவருக்கும் இது ஆனந்தத்தை அளித்தது. இவை போன்ற விளையாட்டுக்களால், பாரதத்தின் பலவகையான கலாச்சாரங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்வினுக்கும் அதே அளவு பலம் சேர்க்கிறது.
  • நாட்டுமக்களே, நவம்பர் மாதம் 15ஆம் தேதியன்று தேசத்தின் பழங்குடியின மக்களின் பெருமை நாள் கொண்டாடப்படும். கடந்த ஆண்டு, பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளன்று, பழங்குடியினரின் பாரம்பரியம் மற்றும் கௌரவத்தைக் கொண்டாடும் வகையிலே தேசம் இந்த நாளைத் தேர்ந்தெடுத்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். பகவான் பிர்சா முண்டா தனது வாழ்க்கையிலே, ஆங்கிலேயர்களின் யதேச்சாதிகாரத்திற்கு எதிராக, இலட்சக்கணக்கான மக்களை ஒருங்கிணைத்தார். இவர் பாரதத்தின் சுதந்திரம் மற்றும் பழங்குடிகளின் கலாச்சாரப் பாதுகாப்பிற்காக, தனது வாழ்க்கையையே பலிதானமாகக் கொடுத்தார். இப்படி எத்தனையோ சிறப்புகளை நாம் பகவான் பிர்சா முண்டாவிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும். நண்பர்களே, மண்ணின் மைந்தன் பிர்சா முண்டா அவர்களைப் பற்றிய பேச்சு எழும் போது, சிறிது காலமே வாழ்ந்த அவரது வாழ்க்கை பற்றி நினைக்கும் போது, இன்றும் கூட அவரிடமிருந்து நாம் கற்க வேண்டிய விஷயம் ஏராளமாக இருக்கிறது. இந்த மண்ணின் மைந்தன் கூறினார் – இந்த பூமி நம்முடையது, நாமே இதன் பாதுகாவலர்கள். அவருடைய இந்த வாக்கியத்தில் தாய்நாட்டிற்கான கடமையுணர்வு பிரதிபலிக்கிறது, சுற்றுச்சூழலுக்கான நமது கடமைகளின் உணர்வு இருக்கிறது. நமது பழங்குடியினக் கலாச்சாரத்தை மறந்து விடக் கூடாது, சற்றுக்கூட அதைப் புறந்தள்ளிவிடக் கூடாது என்ற விஷயத்தில் அவர் எப்போதுமே அழுத்தமளித்து வந்தார். இன்றும் கூட, தேசத்தின் பழங்குடியினச் சமூகங்களிடமிருந்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பல படிப்பினைகளை நாம் கற்க வேண்டியிருக்கிறது.
  • , கடந்த ஆண்டு பகவான் பிர்ஸா முண்டாவின் பிறந்த நாளன்று, ராஞ்சியில் பகவான் பிர்ஸா முண்டா அருங்காட்சியகத்தைத் திறந்து வைக்கும் பேறு கிடைத்தது. எப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ, அப்போது, இதைக் கண்டிப்பாகக் கண்டு வாருங்கள் என்று நான் நாட்டின் இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் மேலும் ஒன்றை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன் அதாவது நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அதாவது நாளை மறுநாளன்று நான் குஜராத்-இராஜஸ்தானின் எல்லையோரம் அமைந்திருக்கும் மான்கட்டிற்குச் செல்கிறேன். பாரதத்தின் சுதந்திரப் போராட்டம், நமது வளமான பழங்குடியினப் பாரம்பரியம் ஆகியவற்றில் மான்கட்டிற்கென விசேஷமான இடம் இருக்கிறது. இங்கே 1913ஆம் ஆண்டு, நவம்பரிலே ஒரு பயங்கரமான படுகொலை அரங்கேற்றப்பட்டது; இதிலே ஆங்கிலேயர்கள் அந்தப் பகுதிவாழ் பழங்குடியினத்தவர்களைக் கருணையே இல்லாமல் கொன்று குவித்தார்கள். இந்தப் படுகொலையில் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினத்தவர் மாண்டு போனார்கள் என்று கூறப்படுகிறது. இந்தப் பழங்குடியினத்தவரின் போராட்டத்திற்குத் தலைமையேற்று நடத்தியவர் கோவிந்த குருஜி அவர்கள். இவருடைய வாழ்க்கை அனைவருக்கும் கருத்தூக்கம் அளிக்கக்கூடிய ஒன்று. இன்று நான் அனைத்துப் பழங்குடியின உயிர்த்தியாகிகள், கோவிந்த குருஜி ஆகியோருடைய மகத்தான சாகஸம் மற்றும் துணிவுக்குத் தலை வணங்குகிறேன். இந்த அமுத காலத்திலே பகவான் பிர்ஸா முண்டா, கோவிந்த குரு அவர்கள், பிற சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஆதர்சங்களை எத்தனை கருத்தொருமையோடு பின்பற்றுகிறோமோ, நமது தேசம் அந்த அளவுக்குச் சிகரங்களைத் தொடும்.
  • நாட்டுமக்களே, வரவிருக்கின்ற நவம்பர் மாதம் 8ஆம் தேதி குருபுரப் ஆகும். குரு நானக் அவர்களின் பிறந்த நன்னாள் எந்த அளவுக்கு நமது நம்பிக்கைகளுக்கு மகத்துவமானதோ, அதே அளவுக்கு அதிலிருந்து நமக்குக் கற்றல்களும் கிடைக்கின்றன. குருநானக் அவர்கள் தனது வாழ்க்கை முழுவதும், மனித சமூகத்திற்காக ஒளி கூட்டினார். கடந்த சில ஆண்டுகளில் தேசம் குருமார்களின் ஒளியை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் பல முயற்சிகளைப் புரிந்திருக்கிறது. குரு நானக் தேவ் அவர்களின் 550ஆவது பிறந்த நாளை, தேசத்திலும், அயல்நாடுகளிலும் பெரிய அளவில் விமரிசையாகக் கொண்டாடக் கூடிய பெரும் பாக்கியம் நமக்குக் கிடைத்தது. பல தசாப்தங்கள் காத்திருப்புக்குப் பிறகு, கர்தார்புர் சாஹிப் இடைவழி நிறுவப்பட்டுள்ளது அதே அளவுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. சில நாட்கள் முன்பு தான் ஹேம்குண்ட் சாஹிபிற்கு கம்பிவடப் பாதை அமைப்புக்கான அடிக்கல் நாட்டும் பேறு கிடைத்தது. நமது குருமார்களின் கருத்துக்களிலிருந்து தொடர்ந்து நாம் கற்றுவர வேண்டும், அவை பொருட்டு அர்ப்பணிப்பு உணர்வோடு இருக்க வேண்டும். இதே நாளன்று தான் கார்த்திகை பௌர்ணமியும் வருகிறது. இந்த நாளன்று நமது தீர்த்தங்களில், நதிகளில் நாம் புனித நீராடுவது வழக்கம், சேவை-தானம் ஆகியவற்றில் ஈடுபடுவோம். இந்த அனைத்துத் திருநாட்களை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். வரவிருக்கும் நாட்களில் பல மாநிலங்கள், தங்கள் மாநில நாட்களைக் கொண்டாடவிருக்கின்றன. ஆந்திர பிரதேசம் தனது நிறுவன நாளைக் கொண்டாடும், கேரளம் பிராவியைக் கொண்டாடும். கர்நாடகம் ராஜ்யோத்சவத்தைக் கொண்டாடும். இதைப் போலவே, மத்திய பிரதேசம், சத்திஸ்கட், ஹரியாணா மாநிலங்களும் தத்தமது மாநில நாட்களைக் கொண்டாடும். இந்த மாநில மக்கள் அனைவருக்கும் நான் என் நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன். நமது அனைத்து மாநிலங்களிலும், ஒருவரிடமிருந்து மற்றவர் கற்பது, உதவி செய்வது, இணைந்து பணியாற்றும் உணர்வு ஆகியன எந்த அளவுக்கு பலமடையுமோ, அந்த அளவுக்கு தேசம் முன்னேறும். இந்த உணர்வோடு நாம் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நீங்கள் எல்லோரும் உங்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமாக இருங்கள். மனதின் குரலின் அடுத்த சந்திப்பு வரை, விடைபெற எனக்கு அனுமதி அளியுங்கள். வணக்கம். நன்றி.

         

**************


(Release ID: 1871970) Visitor Counter : 306