பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடலோரக் காவல்படை பங்களாதேஷின் 20 மீனவர்களைமீட்டு அந்நாட்டு கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தது

Posted On: 26 OCT 2022 4:56PM by PIB Chennai

இந்திய கடலோரக் காவல்படை பங்களாதேஷின் 20 மீனவர்களை மீட்டு அந்நாட்டு கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தது

புதுதில்லி, அக்.26, 2022


இந்தியா- பங்களாதேஷ் சர்வதேச கடல் எல்லைக்கோடு அருகே சாகர் தீவுக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் இருந்து பங்களாதேஷைச் சேர்ந்த 20 மீனவர்களை இந்திய கடலோரக் காவல்படை 2022 அக்டோபர் 25 அன்று மீட்டது. சித்ரங் புயலில் இந்த மீனவர்களின் படகுகள் கவிழ்ந்ததை அடுத்து, இதுகுறித்து தேடுதல் மற்றும் மீட்புக் குழுவுக்கு இந்திய கடலோரக் காவல்படை தகவல் தெரிவித்தது. பின்னர் விரைந்து நடவடிக்கையை மேற்கொண்ட இந்திய கடலோரக் காவல்படையினர் இவர்களை உடனடியாக மீட்டு, பங்களாதேஷ் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தனர்.

  • புயல் கரை கடந்த பின் இந்திய கடலோரக் காவல்படை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதியை தூய்மைப்படுத்தவும், புயலால் பாதிக்கப்பட்ட கப்பல் மாலுமிகளுக்கு உதவி செய்யவும், டோர்னியர் விமானத்தை பயன்படுத்தியது. அப்போது, இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச கடல் எல்லை பகுதியில் இருந்து 90 நாட்டிகல் மைலுக்கு அப்பால் படகுகள் கவிழ்ந்து சுமார் 30 பேர் தத்தளிப்பது தெரிய வந்தது. உடைந்த படகுகளின் பாகங்களை பற்றிக்கொண்டு அவர்கள் உயிருக்கு போராடிய போது, இந்திய கடலோரக் காவல்படையினர் உயிர்காக்கும் தெப்பம் போன்ற சாதனத்தை விமானத்தில் இருந்து வீசினர்.

இதைத் தொடர்ந்து, கடலில் தத்தளிக்கும் 20 பேரை மீட்பதற்கு மலேசியாவின் க்லாங் துறைமுகத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்த நந்த்தா பூம் என்ற வணிகக் கப்பலுக்கு இந்திய கடலோரக் காவல்படையினர் உத்தரவிட்டனர்.

  • கடலோரக் காவல்படை கப்பல்களான விஜயா, வரத், சி-426 ஆகிய கப்பல்களும் தேடுதல் மற்றும் மீட்புக்கு உதவி செய்தன. இந்நிலையில், விஜயா கப்பல் மூலம் பங்களாதேஷ் மீனவர்கள் 20 பேர் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த மருத்துவ அதிகாரி மூலம் இவர்கள் பரிசோதிக்கப்பட்டு பங்களாதேஷ் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1870986

**************



(Release ID: 1871028) Visitor Counter : 158


Read this release in: Odia , English , Urdu , Marathi , Hindi