மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

மத்திய கல்வி அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் மத்திய இணை அமைச்சர் திரு எல்.முருகனுடன் இணைந்து “காசி தமிழ்ச் சங்கமம்” என்ற அறிவிப்பை வெளியிட்டு பதிவு நடைமுறைக்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்


ஞானம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் இரண்டு தொன்மை மையங்களான காசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை காசி தமிழ்ச் சங்கமம் மீண்டும் கண்டறியும் - திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 20 OCT 2022 7:05PM by PIB Chennai

2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற உள்ள காசி தமிழ்ச் சங்கமம்பற்றிய அறிவிப்பை மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம். கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு எல்.முருகனுடன் இணைந்து இன்று வெளியிட்டார். காசி தமிழ்ச் சங்கமம்நிகழ்வுக்கான பதிவுக்குரிய இணையதளத்தை திரு தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.

பல நூற்றாண்டுகளாக நீடித்து இருக்கும்  தமிழ் கலாச்சாரம் மற்றும் காசிக்கு இடையேயான தொடர்புகளை மீண்டும் கண்டறியவும் உறுதி செய்யவும் கொண்டாடவும் பாரதிய பாஷா சமிதி ஒரு முன்மொழிவை கண்டுள்ளது. அதன்படி 2022 நவம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை வாரணாசியில் (காசியில்) ஒருமாத கால காசி தமிழ்ச் சங்கமத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் இரண்டு தொன்மையான  பகுதிகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களும்  அறிஞர்களும் கருத்துப் பரிமாற்றம் செய்வது கருத்தரங்குகள், விவாதங்கள் நடத்துவதும் இந்த இரு பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகள் மற்றும் பகிரப்பட்ட மாண்புகளை வெளிக்கொண்டு வருவதும் இதன் நோக்கமாகும். ஞானம் மற்றும் கலாச்சார பாரம்பரியங்களின் இரண்டு  பகுதிகளை மிக நெருக்கமாக கொண்டுவருவது இதன் விரிவான நோக்கமாகும். நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தை புரிந்துகொள்வதும், இரு பகுதிகளின் மக்களிடையேயான உறவை ஆழப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

இந்த அறிவிப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய திரு தர்மேந்திர பிரதான், இந்தியா என்பது நாகரீக தொடர்பின் அடையாளமாகும். காசி தமிழச் சங்கமம் என்பது இந்தியாவின் நாகரீக சொத்துக்களில் உள்ள ஒற்றுமையை அறிந்து கொள்வதற்கான சிறந்த மேடையாக இருக்கும். ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கட்டமைப்பு மற்றும்  உணர்வின்படி இந்த சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பண்டைய இந்தியாவிற்கும், சமகால தலைமுறைக்கும் இடையே பாலமாக இருக்கும்.

இலக்கியம், தொன்மை நூல்கள், தத்துவம், ஆன்மிகம், இசை, நடனம், நாடகம்,  யோகா, ஆயுர்வேதம், கைத்தறி, கைவினைப் பொருட்கள் போன்றவற்றுடன் நவீன கண்டுபிடிப்புகள் வர்த்தக பரிவர்த்தனைகள், கல்வி, தொழில்நுட்பம், அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் போன்றவையும் காசி தமிழ்ச் சங்கமத்தின் மையப் பொருட்களாக இருக்கும். இவற்றின் மீது விவாதங்களும், விரிவுரைகளும், கருத்தரங்குகளும் நடத்தப்படும் என்று திரு பிரதான் தெரிவித்தார். துறை சார்ந்த நிபுணர்கள் இவற்றுக்கு அழைக்கப்படுவார்கள். மாணவர்கள், கல்வியாளர்கள், தொழில்முறை பழகுநர் ஆகியோருக்கு இது தனித்துவ கற்றல் அனுபவமாக இருக்கும் என்று அவர் கூறினார். 

இந்த நிகழ்ச்சிகளோடு  தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த குழுவினர் அழைத்து வரப்பட்டு  வாரணாசி மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் 8 நாள் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பதிப்பாளர்கள், கலாச்சார வல்லுநர்கள், கலை. இசை, நடனம், நாடகம், நாட்டுப்புறக்கலை, யோகா, ஆயுர்வேதம் போன்றவற்றில் பயற்சி பெறுவோர் சிறு நடுத்தர தொழில்முனைவோர், வர்த்தக பிரிவினர், கைவினைக் கலைஞர்கள், தொல்பொருள் ஆய்வாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வலைப்பூ எழுத்தாளர்கள் உட்பட பல்வேறு குழுவினர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களின் துறைகளோடு தொடர்புடைய வாரணாசி மக்களுடன் கலந்துரையாடுவார்கள். அத்துடன் வாரணாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்வம் உள்ள இடங்களுக்கும் பயணம் செய்வார்கள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 210 பேர்  எட்டு நாள் பயணத்தில் இடம் பெறுவார்கள் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. 12 குழுக்கள் இருப்பதால் ஒரு மாத காலத்தில் 2,500 பேர் பயணம் மேற்கொள்வார்கள்.

சங்கமம் நிகழ்வு நிறைவடையும் போது தமிழ்நாட்டிலிருந்து வருவோர் காசி குறித்த ஆழமான அனுபவத்தை பெறுவார்கள். அனுபவ பகிர்வு, பயணங்கள், உரையாடல்கள், ஆரோக்கியமான அறிவுப் பரிமாற்றம் ஆகியவற்றின் மூலம்   தமிழ்நாட்டின் வளமான கலாச்சாரம் குறித்து காசியைச் சேர்ந்தவர்களும் அறிந்துகொள்வார்கள்.

-----

SMB/Gee/SM/Sne(Release ID: 1869719) Visitor Counter : 261


Read this release in: English , Urdu , Hindi