பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2025-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க இலக்கு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Posted On: 20 OCT 2022 1:15PM by PIB Chennai

2022 அக்டோபர் 22-ஆம் தேதி குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்று வரும் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சியின் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'பாதுகாப்புத்துறைக்கான முதலீடு' நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது, உலகளாவிய விநியோக சங்கிலியை ஒருங்கிணைக்க, இந்திய பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு தொழிற்துறையினர் மற்றும் வெளிநாட்டு அசல் உபகரண உற்பத்தியாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். மேலும் முதலீடு செய்ய இந்திய பாதுகாப்புத் துறையில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

உள்நாட்டு தொழிற்துறை மற்றும் வணிகர்களின் பங்கேற்பு குறித்து தெரிவித்த அவர், தொழிற்துறை பங்கேற்பாளர்களின் நம்பிக்கை ஊக்கமளிப்பதாகவும், இந்திய பாதுகாப்புத் துறை மீதான அவர்களின் நம்பிக்கையை பிரதிபலிப்பதாகவும் கூறினார். இந்திய பாதுகாப்புத் துறைக்கு இது பொற்காலம் என்றும், வரும் காலங்களில் இது மேலும் பிரகாசமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார். பாதுகாப்புத் துறையில் அரசின் எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொண்ட அவர், 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பாதுகாப்பு தளவாட உற்பத்தியை தற்போதுள்ள 12 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 22 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இது வரும் நாட்களில் தொழிற்துறை வளர்ச்சிக்கு இணையற்ற வாய்ப்புகளை அளிக்கும் என்றார்.

இந்திய பாதுகாப்புத் துறையின் சாதனைகள் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், “போர் விமானம், விமானம் தாங்கி கப்பல், பெரிய பீரங்கிகள், தாக்கும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றின் மூலம் உள்நாட்டுத் தொழிற்துறை அதன் திறமைகளை நிரூபித்துள்ளது என்றும், அந்த அனுபவங்கள் நமக்குக் கிடைத்துள்ளதாகவும் கூறினார். இந்த அனுபவங்கள் எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பு ஆயுதங்கள், அமைப்புகளை உருவாக்கவும், ஆதரிக்கவும், மேம்படுத்தவும் உதவும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022  தற்போதுள்ள மற்றும் வருங்கால முதலீட்டாளர்களுக்கு ஏற்ற, இந்திய பாதுகாப்புத் துறையின் அபரிமித வளர்ச்சியின் ஒரு பகுதியாக மாறுவதற்கான ஒரு இடமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

********

KG/SM/SNE


(Release ID: 1869672) Visitor Counter : 187