பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் லோத்தலில் உள்ள தேசிய கடல் சார் பாரம்பரிய வளாகப் பணியின் முன்னேற்றத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் ஆய்வு செய்தார்

Posted On: 18 OCT 2022 6:25PM by PIB Chennai

குஜராத் மாநிலம் லோத்தலில் உள்ள தேசிய கடல் சார் பாரம்பரிய வளாகப் பணியின் முன்னேற்றத்தை இன்று காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆய்வு  செய்தார்.

இந்த நிகழ்வில்  திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர்  இந்தத் திட்டத்தின் வேகம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். செங்கோட்டை கொத்தளத்திலிருந்து தாம் உரையாற்றிய போது, 5 உறுதிமொழிகள் பற்றி பேசியதை நினைவு கூர்ந்த பிரதமர், நமது பாரம்பரியத்திற்காக பெருமிதம் கொள்ளவேண்டும் என்று கூறியதை கோடிட்டுக் காட்டினார்.

பழங்காலத்தில் இந்தியாவின் வர்த்தகமும், வணிகமும் பெருமளவு பரவியிருந்ததை எடுத்துரைத்த பிரதமர், உலகின் ஒவ்வொரு நாகரீகத்துடனும் இந்தியாவிற்கு தொடர்பு இருந்ததை சுட்டிக்காட்டினார்.  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்த அடிமைத்தனம், நமது பாரம்பரியத்தை உடைத்தது மட்டுமின்றி நமது பாரம்பரியம் மற்றும் திறமைகளிலிருந்து மாறுபட்டும் வளரவேண்டிய நிலை ஏற்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

சிந்து சமவெளி நாகரீக காலத்தில், லோத்தல் என்பது மிகப் பெரிய வர்த்தக மையமாக இருந்தது மட்டுமின்றி, இந்தியாவின், கடல்சார் ஆற்றலுக்கும், வளத்திற்கும் அடையாளமாக  இருந்தது என்று அவர் கூறினார்.   லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களின் ஆசி இந்தப் பகுதிக்கு இருந்தது பற்றி குறிப்பிட்ட அவர், லோத்தல் துறைமுகத்தில் அக்காலத்தில்   84 நாடுகளின் கொடிகள் பறந்ததாகவும், வல்லபி என்பது 80 நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் இருப்பிடமாக இருந்துள்ளதாகவும் கூறினார்.

லோத்தலில் அமைக்கப்படும் தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகம், இந்தியாவின் பன்முக கடல்சார் வரலாற்றை கற்பதற்கும் புரிந்துகொள்வதற்குமான மையமாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார். சாமானிய மக்களும் எளிதாக இந்திய வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், இந்த வளாகம்  அமைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.  லோத்தலில் அமைக்கப்படும் தேசிய கடல்சார் வளாகம் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமிதம் அளிக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்தர் படேல், மத்திய அமைச்சர்கள் திரு மன்சுக் மாண்டவியா, திரு சர்பானந்த சோனாவால் ஆகியோரும் பங்கேற்றனர்.

------

 (Release ID: 1868911)



(Release ID: 1868960) Visitor Counter : 119