விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் அதன் பல்வேறு பிரிவுகள் இன்று ‘மகளிர் விவசாயி தினம் ’ கொண்டாடுகின்றன
Posted On:
15 OCT 2022 4:22PM by PIB Chennai
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் தேசிய பாலின வள மையம் சார்பில் இன்று 'மகளிர் விவசாயி தினம்' அல்லது 'சர்வதேச கிராமப்புற மகளிர் தினம்' கொண்டாடப்பட்டது. 2023 ஆம் ஆண்டை 'ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளதால், இந்த ஆண்டின் கருப்பொருள் 'தினை: பெண்களை மேம்படுத்துதல் மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை வழங்குதல்' என்பதாகும். இதன் தொடக்க நிகழ்ச்சி, மத்திய வேளாண் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமரின் வழிகாட்டுதலின் படி,காணொலி மூலம் ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது ,ஹைதராபாத் இந்திய தினை ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய தொழில்நுட்ப ஆதரவுடன் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய திரு தோமர், 2023ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாகக் குறிக்க, இந்திய அரசால் தொடங்கப்பட்டு 72 நாடுகளின் ஆதரவுடன் தீர்மானம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய தினைகள், சமையல் வகைகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ‘சர்வதேச தினை ஆண்டு’ என்பது உலகளாவிய உற்பத்தியை அதிகரிப்பதற்கும், திறமையான செயலாக்கம் மற்றும் நுகர்வுகளை உறுதி செய்வதற்கும், பயிர் சுழற்சியின் சிறந்த பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், உணவின் முக்கிய அங்கமாக தினைகளை ஊக்குவிப்பதற்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பிரதமரின் தற்சார்பு இந்தியா என்னும் தொலைநோக்கு பார்வையின்படி, விவசாய வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் பெண்களை கொண்டு வருவதற்கு, அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். உணவு தானியங்களின் முதன்மை உற்பத்தியாளர்கள் பெண்கள் என்றும், அவர்கள் பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாவலர்கள் என்றும் கூறிய அவர், தினைகள் நமது உள்நாட்டு உணவு முறைகளில் இருந்த முக்கியமான உணவு தானியம் என்றும் தெரிவித்தார். தினை விவசாயம் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாப்பதுடன், பெண் விவசாயிகள், சுயதொழில் புரியும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது, மாறிவரும் காலத்தை சமாளிக்க தினை அடிப்படையிலான விவசாயம் உள்ளது. இந்திய அரசும் பெண்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் பல முயற்சிகளை எடுத்து, அவர்களை வளர்ச்சி செயல்முறையின் மைய நிலையில் வைத்திருக்கிறது. இந்த முயற்சிகளில் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வேளாண் அறிவியல் மையம் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பயிற்சி மூலம் பெண்களின் திறனை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி கலந்து கொண்டு உரையாற்றினார்.
"இந்தியாவில் விவசாயம் மற்றும் உணவு முறைகளில் ஆதாரங்கள் அடிப்படையிலான பாலின சமத்துவமின்மையை" சித்தரிக்கும் புத்தகத்தை திரு தோமர் வெளியிட்டார், இது பாலின பகுப்பாய்வு தேவைப்படும் பகுதிகளில் கவனம் செலுத்த கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியாக இருக்கும். மூத்த மற்றும் நடுத்தர அளவிலான விரிவாக்கச் செயல்பாட்டாளர்கள், பெண் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழில் முனைவோர் மற்றும் பல்வேறு மாநிலங்கள்/நிறுவனங்கள்/ஸ்டார்ட்-அப்கள், பயிற்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மேலும் பெண்கள் ஸ்டார்ட்-அப்களால் ஒரு கண்காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற்ற பெண் தொழில் முனைவோர்களும் இந்நிகழ்ச்சியின் போது தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் தெரிவித்தனர்.
*****
(Release ID: 1868083)
Visitor Counter : 507