நிதி அமைச்சகம்

வாஷிங்டன் டி.சியில் மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

Posted On: 15 OCT 2022 11:27AM by PIB Chennai

வாஷிங்டன் டி.சியில் நடைபெற்ற உலக வங்கி- சர்வதேச நிதியத்தின் வளர்ச்சிக் குழுவின் கூட்டுக் கூட்டத்தில் மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று பங்கேற்றார்.

உணவு மற்றும் எரிசக்தி பிரச்சினை, பருவநிலை மற்றும் வளர்ச்சி இலக்கங்களை அடைதல் ஆகிய உலகம் சந்தித்து வரும் இரண்டு முக்கிய சவால்கள் பற்றி விவாதிப்பதற்காக வளர்ச்சிக் குழு கூடியது.

உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பயிரிழப்பு மற்றும் உணவு வீணாவதைத் தடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், என்று நிதியமைச்சர் வலியுறுத்தினார். சம அளவிலான மானியங்கள் என்ற கண்ணோட்டத்தை உலக வங்கி தவிர்க்க வேண்டும் என்றும், விளிம்பு நிலையில் உள்ள குடும்பங்களுக்கான ஆதரவை வேறுபடுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்தியாவில் பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், இதன் மூலம் சுகாதாரமான சமையல் வசதி, அனேகமாக அனைத்து பெண்களையும் சென்றடைந்திருப்பதை இந்தியா உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார்.

எரிசக்தியின் முறையான பயன்பாட்டை அதிகரிப்பதற்கும், உணவு இழப்பைக் குறைப்பதற்கும் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஊக்குவிப்பது; புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் நிதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான உதவிகளை நாடுகளுக்கு வழங்குவது; சர்வதேச வளர்ச்சி சங்கம், மறு கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கியின் வாயிலாக பிராந்திய ஒருங்கிணைப்பிற்கு ஆதரவளிப்பது ஆகிய மூன்று வாய்ப்புகள் உலக வங்கி குழுவின் முன் இருப்பதாக திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

*******



(Release ID: 1868012) Visitor Counter : 142