நிதி அமைச்சகம்

அமெரிக்காவில் சர்வதேச நிதியம் மற்றும் நிதிக் குழுவின் கூட்டத்தில் மத்திய அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

Posted On: 15 OCT 2022 10:04AM by PIB Chennai

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் சர்வதேச நிதியத்தின் தலைமையகத்தில் சர்வதேச நிதியம் மற்றும் நிதிக்குழுவின் கூட்டத்தில் நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று கலந்து கொண்டார்.

மிகப்பெரிய பொருளாதாரங்களில் வளர்ச்சி குறைவு, புவி அரசியல் சூழலால் ஏற்பட்டுள்ள எல்லை தாண்டிய தாக்கங்கள், உணவு மற்றும் எரிசக்தி விலையேற்றத்தால் நிகழ்ந்த பணவீக்க அழுத்தம் உட்பட சர்வதேச பொருளாதாரம் முக்கிய இடர்பாடுகளால் சிக்கியுள்ள சூழலில் இந்தக் கூட்டம் நடைபெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நிதியாண்டு 2022-23 இல் இந்திய பொருளாதாரம் 7% வளர்ச்சியை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக முக்கிய அமைப்பு சார்ந்த சீர்திருத்தங்களில் அரசு கவனம் செலுத்துவதும், இணக்கமான உள்நாட்டு கொள்கை சூழலியலும் இதற்கு வித்திட்டதாக அவர் தெரிவித்தார்.

 

பணவீக்க மேலாண்மையில் கவனம் செலுத்தும் அதே வேளையில், வளர்ச்சியைப் பாதுகாக்கவும் இந்திய அரசு அளித்து வரும் முன்முயற்சிகள் குறித்து நிதி அமைச்சர் எடுத்துரைத்தார். “நாட்டின் பிரம்மாண்டமான பொது விநியோக இணைப்பின் வாயிலாக கடந்த 25 மாதங்களாக விளிம்பு நிலையில் உள்ள சுமார் 800 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்”, என்றார் அவர்.

ஏழை எளிய மக்களுக்கும் நிதி சேவைகள் சென்றடைவதற்கு அரசு முன்னுரிமை அளிப்பதாகவும், இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பின் வாயிலாக இது மேற்கொள்ளப்படுவதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். உலக அளவில் மிகக் குறைந்த பரிமாற்ற கட்டணங்களோடு டிஜிட்டல் கட்டண முறையில் இந்தியா முன்னணி நாடாக விளங்குகிறது என்று அவர் தெரிவித்தார்.

*******



(Release ID: 1868000) Visitor Counter : 202