குடியரசுத் தலைவர் செயலகம்
குஜராத்தில் குடியரசுத்தலைவர்; சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றார்; சுகாதாரம், நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Posted On:
03 OCT 2022 5:30PM by PIB Chennai
சுகாதாரம், நீர்ப்பாசனம், தண்ணீர் விநியோகம் மற்றும் துறைமுக வளர்ச்சி தொடர்பான குஜராத் அரசின் பல்வேறு திட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (அக்டோபர் 3, 2022) அடிக்கல் நாட்டினார். அத்துடன் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் திட்டங்களான கண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுகத்தின் மேம்பாட்டுப் பணியையும், அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர், நாட்டின் வளர்ச்சிப் பணிகளில் குஜராத் மாநிலம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என்று கூறினார். நாட்டின் மக்கள் தொகையில் 5 சதவீதத்தை கொண்டுள்ள குஜராத் மாநிலம், நாட்டின் வேளாண் உற்பத்தியில் 20 சதவீத பங்களிப்பை வழங்குவதாக குறிப்பிட்டார். குஜராத் மாநிலத்தில் வேளாண் வளர்ச்சிக்காக வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் நடைமுறைகள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.
சுகாதாரத்துறையில் குஜராத் மாநிலம் மிகப் பெரிய சாதனைப் படைத்துள்ளதாக குடியரசுத்தலைவர் தெரிவித்தார். நாட்டிலேயே கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதார அட்டை வழங்கிய முதலாவது மாநிலம் குஜராத் என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், மூலம் புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் கூறினார்.
முன்னதாக அகமதாபாத் சென்ற குடியரசுத்தலைவர் சபர்மதி ஆசிரமம் சென்று, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் ராட்டையில் நூல் நூற்றார்.
----
(Release ID: 1864831)
Visitor Counter : 183