அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தூய்மை எரிசக்திக்கான புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்து, எதிர்காலத்தில் கார்பன் வெளியீடுகளைக் குறைப்பதில் இந்தியா உறுதி: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
Posted On:
24 SEP 2022 1:02PM by PIB Chennai
தூய்மை எரிசக்திக்கான புதிய கண்டுபிடிப்புகளை அதிகரித்து, எதிர்காலத்தில் கார்பன் வெளியீடுகளைக் குறைப்பதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்கில் நடைபெறும் “உலகளாவிய தூய்மை எரிசக்தி செயல் மன்றம் 2022” இல், தூய்மை எரிசக்தி அமைச்சகங்கள் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் அமைச்சகங்கள் அளவிலான குழு கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனிப்பொறுப்புகள்), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தூய்மையான எரிசக்தியில் புதிய கண்டுபிடிப்புகளையும் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நாட்டின் அபரிமிதமான எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீவிரமாக இருப்பதாகக் கூறினார்.
2030-ஆம் ஆண்டிற்குள் புதைப்படிவம் அல்லாத ஆதாரங்களில் இருந்து 500 ஜிகா வாட் திறன் கொண்ட மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், தற்போதிலிருந்து 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு பில்லியன் டன் அளவில் வெளியீடுகளைக் குறைக்கவும் இந்தியா உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்தியாவின் உயர்நிலை கூட்டு அமைச்சகக் குழுவை வழி நடத்தும் அமைச்சர், தூய்மையான எரிசக்திக்கான மாற்று முறைகள், உற்பத்தி திறனை அதிகரித்தல், எரிசக்தி பயன்பாட்டை முறைப்படுத்துதல் மற்றும் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்பு திட்டங்கள் உள்ளிட்ட ஹைட்ரஜனுக்கான கொள்கை முதலிய உத்திகளை இந்தியா பின்பற்றுவதாக 30 நாடுகளைச் சேர்ந்த எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் முன்னிலையில் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
2025-ஆம் ஆண்டிற்குள் 150 பில்லியன் அமெரிக்க டாலரை நோக்கி செல்லும் உயிரி அடிப்படையிலான பொருளாதாரத்திற்கான திட்டத்தையும், உத்தியையும் இந்தியா உருவாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். புத்தாக்க இயக்கம் 2.0 இன் கீழ், தூய்மையான எரிசக்தி கண்டுபிடிப்புகளுக்கான நிதி உதவியை பொது-தனியார் கூட்டுமுயற்சியின் மூலம் இந்திய அரசு உறுதி செய்வதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
2023- ஆம் ஆண்டில் ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்குவதோடு, தூய்மை எரிசக்தி அமைச்சகங்கள் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் அமைச்சகங்கள் கூட்டத்தையும் இந்தியா நடத்தும் என்று அவர் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861911
***************
(Release ID: 1861918)
Visitor Counter : 169