பாதுகாப்பு அமைச்சகம்

‘தற்சார்பு இந்தியா திட்டம்’ இந்தியாவை உலகின் வலுவான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என புதுதில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்

Posted On: 16 SEP 2022 12:45PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு திட்டமான ‘தற்சார்பு இந்தியா’ உலகின்  வலுவான, மதிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியாவை மாற்றியுள்ளது. புதுதில்லியில் 2022 செப்டம்பர் 16 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார்.  தனது தேவைகளை குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான தேவைகளை நிறைவேற்ற எந்த நாட்டையும் சார்ந்திருப்பதில்லை  என்ற புதிய இந்தியா கனவை நனவாக்க அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறையில் தற்சார்பை எட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகளை விவரித்த திரு ராஜ்நாத் சிங்,  உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான சாதனங்களின் பட்டியலில் 310 வகைகளை சேர்த்திருப்பதும் தனியார் துறையை இதில் ஊக்குவித்திருப்பதும் இதற்கான உதாரணங்கள் என்று கூறினார். எதிர்கால சவால்கள் அனைத்தையும் கையாண்டு நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரித்து ஆயுதப்படைகளுக்கு வழங்குவதில் அரசு ஊசலாட்டம் இல்லாத உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.  அடுத்த சில ஆண்டுகளில் நீர், நிலம், ஆகாயம்,  விண்வெளி ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கான நவீன பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் திறன் உள்நாட்டு தொழிற்சாலைகளுக்கு இருக்கும் என்று அவர் மேலும் கூறினார். இதற்குத் தேவையான சூழலை உருவாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே ரூ.1,900 கோடியாக இருந்த பாதுகாப்பு சாதனங்களின் ஏற்றுமதி தற்போது ரூ.13,000 கோடியை கடந்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். 2025-ஆம் ஆண்டுக்குள் பாதுகாப்பு சாதனங்களின் உற்பத்தி இலக்கான ரூ.1.75 லட்சம் கோடியை எட்ட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், இதில், ரூ.35,000 கோடிக்கான ஏற்றுமதியும் அடங்கும் என்றார். நாட்டின் முதலாவது விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 76 சதவீத சாதனங்களுடன் தயாரிக்கப்பட்டு கொச்சியில் 2022 செப்டம்பர் 2, அன்று பிரதமரால் கடற்படையில் இணைக்கப்பட்டதை அமைச்சர் சிறப்பு அம்சமாக குறிப்பிட்டு பேசினார். தற்சார்பை அடைவதற்கான இந்தியாவின் பாதையில் இது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அதிவேகமான வளர்ச்சிக்கு மக்களிடம் உள்ள ஒற்றுமையும், தேசபக்தியும், முக்கிய காரணங்களாக உள்ளன என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். தங்களுக்கான  துறைகளில்  பணியாற்றும் போது தங்களின் இதயங்களிலும், மனங்களிலும் தேசத்தை  மையமாகக் கொண்டிருக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த திரு ராஜ்நாத் சிங், இது மட்டுமே நாட்டை மகத்தான உச்சங்களுக்கு கொண்டுசெல்ல உதவும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1859762

**************



(Release ID: 1859779) Visitor Counter : 161