குடியரசுத் தலைவர் செயலகம்
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62-வது பாடத்திட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசுத் தலைவருடன் சந்திப்பு
Posted On:
15 SEP 2022 1:10PM by PIB Chennai
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62-வது வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தனர்.
அவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் தலைவர், நமது உரையாடலின் போது அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையாக பாதுகாப்பு என்பது உள்ளது. ஆனால் இதற்கு விரிவான அர்த்தங்கள் உள்ளன. கடந்த தசாப்தங்களாக இதன் பொருள் அதிகமாக விரிவடைந்துள்ளது. பிரதேச பாதுகாப்பு என்பது அரசியல் மற்றும் பொருளாதார விஷயங்களிலும் இப்போது காணப்படுகிறது. இவ்வாறு தேசிய பாதுகாப்பு கல்லூரியின் நோக்கம், உத்திப்பூர்வமான பொருளாதார, அறிவியல் பூர்வமான, அரசியல் ரீதியான, தேசிய பாதுகாப்பு தொழிலியல் அம்சங்கள் பற்றிய பாடத்தை படிப்பதாகும். இது இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது. தேசிய பாதுகாப்பு கல்லூரி பல ஆண்டுகளாக அதன் நோக்கத்தை நிறைவேற்றி வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62-வது பாடத்திட்டத்தில் ஆயுதப்படைகளில் இருந்து 62 பேரும், குடிமைப்பணிகளில் இருந்து 20 பேரும், நட்புறவு கொண்ட வெளிநாடுகளில் இருந்து 35 பேரும், பெருவணிகத்துறையில் இருந்து ஒருவரும் சேர்ந்துள்ளனர். இது ஒரு தனித்துவமான அம்சம் என குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். பல்வேறு கண்ணோட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பை பாடத்திட்ட உறுப்பினர்களுக்கு இது வழங்குகிறது என்றும், இதன் மூலம் அவர்களது எண்ணங்களையும், புரிதல்களையும் விரிவுபடுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மிகவேகமாக இயங்கிவரும் உலகில் நாம் வசிக்கிறோம். இதில் சிறிய மாற்றம் கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று கூறிய குடியரசுத் தலைவர், சில சமயங்களில் இது பாதுகாப்பு அம்சத்தையும் கொண்டிருக்கும் என தெரிவித்தார். கொவிட் பெருந்தொற்றின் வேகமும், பரவலும் மனிதகுலம் எதிர்கொண்ட அச்சுறுத்தலுக்கு ஒரு உதாரணமாகும். மனிதகுலம் எத்தகைய பாதிப்புக்கும் உட்பட்டது என்பதை நாம் உணர அது வழிவகுத்தது. பாரம்பரிய அச்சுறுத்தல்களுடன் எப்போதும் கண்டிராத இயற்கை சீற்றங்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பருவநிலை மாற்றமும், நீடித்த வளர்ச்சியும் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களாக உள்ளன. இவற்றுக்கு தீர்வு காண நாடுகள் ஒன்றிணைந்து பாடுபடுவது அவசியமாகும். நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளுடன், பாதுகாப்பு கொள்கைகளும் ஒன்று சேரும் நேரமாக இது உள்ளது. எனவே நம்மை பன்நோக்கு, பல பரிமாண அணுகுமுறையுடன் தயார்படுத்திக்கொள்வது அவசியமாகும் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.
ஒரு நாடாக இந்தியா தற்சார்பாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்த கண்ணோட்டத்தை சாத்தியமாக்க பல்வேறு கொள்கை முயற்சிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த தொலைநோக்கு பார்வைதான் இந்தியாவை வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறது. சமீபத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான விக்ராந்த் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது, ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் தருகின்றன. இந்த முன்னேற்றப் பாதையில் உறுதியான முறையில் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
**************
(Release ID: 1859544)
Visitor Counter : 185