உள்துறை அமைச்சகம்
காந்தி நகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு பிரிவுகளையும் தொடங்கிவைத்தார்
Posted On:
28 AUG 2022 8:21PM by PIB Chennai
காந்தி நகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார். பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு பிரிவுகளையும் அவர் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அர்விந்த் குமார், குஜராத் சட்டத்துறை அமைச்சர் திரு ராஜேந்திர திரிவேதி, மத்திய உள்துறை செயலாளரும், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான டாக்டர் ஜெ எம் வியாஸ் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த திரு அமித் ஷா, உலகின் முதலாவது தடய அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டங்கள் பெற்று, சமூகத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு இது மிகவும் முக்கியமான நாள் என்று குறிப்பிட்டார். 21 நாடுகளைச் சேர்ந்த 91 மாணவர்கள் உட்பட 1132 மாணவர்கள் தடய அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் நிபுணர்களாக சமூகத்திற்கு செல்லவிருக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
டிஎன்ஏ-வுக்கான சிறப்பு மையம், சைபர் பாதுகாப்புக்கான சிறப்பு மையம், புலனாய்வு மற்றும் தடய உளவியலுக்கான சிறப்பு மையம் ஆகியவற்றை தொடங்கிவைத்த உள்துறை அமைச்சர், இவை கற்பித்தல், பயிற்சி மற்றும் ஆலோசனைக்கான முக்கிய மையங்களாக இருக்கும் என்றார். மேலும் இவை தடய அறிவியல் ஆராய்ச்சி உலகின் குவி மையமாக இந்தியாவை மாற்றும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் தண்டனைச் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் காலத்திற்கேற்ப மாற்றத்தை ஏற்படுத்தவிருப்பதாக திரு அமித் ஷா குறிப்பிட்டார். சுதந்திரத்திற்குப் பின் இந்தச் சட்டங்களை இந்திய தன்மைக்கேற்ப மாற்றவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சுதந்திர இந்தியாவின் கண்ணோட்டத்திற்கு ஏற்ற வகையில் இந்த சட்டங்களை மாற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். பெருவாரியான மக்களுடன் விவாதித்து இந்த சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆதரவுடன் 2025-க்குள் அனைத்து மாநிலங்களிலும் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் அமைக்கப்படுவது பூர்த்தியடையும் என்று எதிர்பார்ப்பதாக திரு அமித் ஷா தெரிவித்தார். தற்சார்பு இந்தியா என்பதை நனவாக்கும் விதமாக இந்திய நிறுவனங்களால் முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரண்டு தடய அறிவியல் நடமாடும் பரிசோதனைக் கூடங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். இத்தகைய நடமாடும் பரிசோதனைக் கூடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருப்பதற்கு வகை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
பட்டங்கள் பெறும் மாணவர்கள் தங்களுக்காக பாடுபடுவதோடு, மற்றவர்களுக்காகவும், நாட்டுக்காகவும் பாடுபடுவது கூடுதல் திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். மாணவர்களும், இளைஞர்களும் தங்களின் தாய்மொழியை ஒருபோதும் மறக்கக் கூடாது என்பதை அறிவுறுத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையும் தாய்மொழிகளில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1855082
***************
(Release ID: 1855178)