குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ராஜஸ்தான் இளைஞர் சங்க வைர விழாவில் குடியரசு துணைத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
Posted On:
31 JUL 2022 8:18PM by PIB Chennai
உங்களது வைர விழா கொண்டாட்டங்களை துவக்கி வைப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எந்தவொரு அமைப்பின் வரலாற்றிலும் அறுபது ஆண்டுகள் என்பது ஒரு பெரிய மைல்கல். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். இந்த அமைப்பு பல ஆண்டுகளாக செய்து வரும் போற்றுதலுக்குரிய சேவையை தொடர்ந்து செய்யும் என்று நான் உண்மையாக நம்புகிறேன். வரும் ஆண்டுகளில், நீங்கள் செய்யும் அரிய பணிகள் இன்னும் பலரின் வாழ்க்கையை மாற்றும் என்று நான் நம்புகிறேன்.
சென்னையில் குடியேறிய ராஜஸ்தானி சமூகத்தின் பழமையான அமைப்புகளில் ஒன்றான ராஜஸ்தான் இளைஞர் சங்கம், அவர்களின் ' புத்தக வங்கி திட்டத்தின்' கீழ், தேவைப்படும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்களை இலவசமாகக் கிடைக்கச் செய்வதில் அற்புதமான பணியைச் செய்து வருவதைக் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திட்டத்தின் கீழ், ராஜஸ்தான் இளைஞர் சங்க புத்தக வங்கி, கல்லூரி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை கடனாக வழங்குகிறது, அதில் மாணவர்கள் இந்த புத்தகங்களை படிக்கும் ஆண்டிற்கு வைத்திருந்து அடுத்த ஆண்டு திருப்பிக் கொடுத்து புதிய பாடப்புத்தகங்களுக்கு மாற்றுகிறார்கள். இது பாராட்டத்தக்க முயற்சியாகும், மேலும் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள பெரும்பாலான கல்லூரிகள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன. இம்முயற்சியின் மூலம் ஏற்கனவே 1.4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பது அதன் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் 3000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்படுவதையும், எந்த நேரத்திலும் குறைந்தபட்சம் 8500 மாணவர்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாக இருப்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ஒவ்வொரு மாணவரும் தரமான கல்விக்கு சமமான வாய்ப்பைப் பெறத் தகுதியானவர்கள். சமமான கல்விக்கான அனைத்து தடைகளும் களையப்படுவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு மாணவரும் தங்களுடைய பாடப் புத்தகங்களை வாங்கவோ அல்லது கல்விக் கட்டணத்தை செலுத்தவோ முடியாமல் பின்தங்கி விடக்கூடாது.
என் அன்பான சகோதர சகோதரிகளே,
தேசத்தின் வளர்ச்சியின் வேகத்திற்கு உத்வேகத்தை அளிக்கக்கூடிய மாற்றத்தின் மிக சக்திவாய்ந்த உந்துசக்தியாக கல்வி உள்ளது. இளைஞர்களின் முழுத் திறனையும் பயன்படுத்தி, நமது இளம் மனதின் திறமை மற்றும் ஆக்கப்பூர்வமான ஆற்றல்கள் இந்தியாவை வலிமையான நாடுகளின் பட்டியலில் சேர்க்கும். மக்கள்தொகை நன்மைகள், அதிக திறமையான இளைஞர்களின் இருப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பல்வேறு களங்களில் இந்தியா உலகத் தலைமையாக மாறுவதற்கு மிகப்பெரிய சாத்தியம் உள்ளது. 21 ஆம் நூற்றாண்டின் டிஜிட்டல் உந்துதல், அறிவு அடிப்படையிலான தேவைகளுக்கு ஏற்ப, தரமான கல்வியை வழங்குவதும், படித்த மனிதவளத்தின் இந்த பரந்த தொகுப்பை மிகவும் திறமையான பணியாளர்களாக மாற்றுவதும் காலத்தின் தேவையாகும். எனவே, தரமான, குறைந்த செலவில் கல்வியைப் பெறுவதில் எந்தக் குழந்தையும் பின் தங்கிவிடாமல் இருக்க, நாம் மீண்டும் 'விஸ்வகுரு' நிலையை அடைவதற்கு எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.
கல்விக்கான அவர்களின் பாராட்டுக்குரிய முயற்சிகளைத் தவிர, ராஜஸ்தான் இளைஞர் சங்கத்தின் பல துணை நிறுவனங்கள் உணவு வங்கிகள், மருந்து வங்கிகள், இ-வங்கிகள் போன்றவை தடுப்பூசி இயக்கங்களை நடத்துவதன் மூலம் மற்றும் அவசர உபகரணங்களை வழங்குவதன் மூலம் வெவ்வேறு வடிவங்களில் சமூகத்திற்கு சேவை செய்கின்றன. நண்பர்களே, தேவைப்படுபவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் சாராம்சம். "பகிர்வு மற்றும் கவனிப்பு" என்ற நமது பண்டைய தத்துவத்திற்கு ஏற்ப ஒரு சமூகமாக நாம் வாழ்கிறோம் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க்கையில் வெற்றியும், புகழும், செல்வமும் அடைந்த ஒவ்வொரு இந்தியனின் கடமை, சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் திரும்பக் கொடுப்பது என்பது எனது உறுதியான நம்பிக்கை. நம்முடையது ஒரு பரந்த நாடு, தேசத்தைக் கட்டியெழுப்புவது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல; அனைத்து குடிமக்களும் இதற்கு முன்வர வேண்டும். சக குடிமக்களின் நலனுக்காக தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்.
மகா கவிஞரான திருவள்ளுவர் கூறியது போல், " நற்பண்புகளில் மிகவும் சிறந்த இரக்கமே, உலகையே முன்னெடுத்து சென்று இயக்குகிறது" என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நண்பர்களே, உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் அன்பாக நடந்து கொள்ளவும், எல்லோரிடமும் கருணையுடன் நடந்து கொள்ளவும், தேவைப்படுபவர்களுக்கு உதவவும் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். வெற்றிக்கான விரைவான படிகளை நாம் எடுக்கும்போது, நம் சகோதர சகோதரிகள் யாரையும் விட்டுவிடாமல், சாத்தியமான எல்லா வழிகளிலும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க முயல்வோம்.
ஜெய் ஹிந்த்!
***************
(Release ID: 1846812)
Visitor Counter : 186