பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7,22,000-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்

Posted On: 27 JUL 2022 1:29PM by PIB Chennai

கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 7,22,000-க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வேலை பெற்றுள்ளனர்.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து பூர்வமாக பதிலளித்த மத்திய பிரதமர் அலுவலக மற்றும் பணியாளர் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இதனைத் தெரிவித்தார். கடந்த நிதியாண்டில் மட்டும் 38,850 பேர் மத்திய அரசுத் துறைகளில் நிரந்தர வேலை வாய்ப்பை பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தின் மூலம் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் மத்திய அரசு சுயவேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கும் தனிநபர்கள் தொழில் தொடங்குவதற்கும் 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.

சாலையோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதித் திட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 1-ந் தேதி தொடங்கப்பட்டதையடுத்து கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் இலவசக் கடன் மூலம் தங்களது தொழிலை மீண்டும் தொடங்குவதற்கு வகை செய்யப்பட்டதாகவும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.

***************(Release ID: 1845349) Visitor Counter : 168