ஜவுளித்துறை அமைச்சகம்
பருத்தி உற்பத்தியில் உலகளாவிய சிறந்த தரநிலைகளை இந்தியா பின்பற்றுவதற்கு உரிய தருணம்: திரு பியூஷ் கோயல்
Posted On:
24 JUL 2022 5:17PM by PIB Chennai
பருத்தி உற்பத்தித்திறனை அதிகரித்தல், இந்தியப் பருத்தியின் முத்திரையை மேம்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் புது தில்லி வணிக பவனில் இன்று பருத்தி ஜவுளி மதிப்புச் சங்கிலியின் பங்குதாரர்களுடன் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் முன்னிலையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு ,பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. மத்திய ஜவுளி மற்றும் ரயில்வே இணையமைச்சர் திருமதி. தர்ஷனா வி. ஜர்தோஷ் இதில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பருத்தி உற்பத்தியில் உலகத் தரத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று கூறினார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க இந்தியாவில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
உற்பத்தித்திறன் , விவசாயிகளின் கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றில் ஆராய்ச்சியை அதிகரிக்க தனியார் துறை பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஒருங்கிணைந்த அணுகுமுறையை வலியுறுத்திய திரு கோயல், பருத்தி மதிப்பு சங்கிலியை வலுப்படுத்த தனியார் துறை தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தொழில்துறையினரின் சமமான பங்களிப்பின் மூலம் நல்ல தரமான பருத்தி உற்பத்தியில் நாம் முத்திரை பதிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
நமது பருத்தி விவசாயிகளுக்கு சரியான விதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், நவீன தொழில்நுட்பம் மற்றும் முற்போக்கான விவசாய முறைகளைப் பின்பற்ற விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலமும் மகசூல் மற்றும் லாப வரம்புகளை அதிகரிப்பது இன்றியமையாதது என்று திரு கோயல் கூறினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், பருத்தி உற்பத்தியின் வளர்ச்சி மற்றும் உற்பத்தித்திறன் நாட்டின் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றார். உற்பத்தித்திறனை அதிகரிக்க குறுகிய கால மற்றும் நீண்ட கால உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதிக அடர்த்தி கொண்ட விவசாயம் மற்றும் நுண்ணீர்ப் பாசனம் ஆகியவை நாட்டின் பெரும்பகுதிகளில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க மிகவும் அவசியமாகும் என்றார்.
இந்தக் கூட்டத்தில், பருத்தி மதிப்புச் சங்கிலி தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் குறித்து,நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டன. ஜவுளி, வேளாண்மை, வர்த்தகம், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை அதிகாரிகள், பெருநிறுவனங்கள், விவசாயிகள், விதைத் தொழில்துறை மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
***************
(Release ID: 1844466)
Visitor Counter : 229