ஜல்சக்தி அமைச்சகம்

கழிவுநீர்மேலாண்மையில் 100% செறிவூட்டல் பெற்ற தமிழ்நாட்டின் பாப்பாங்குழி கிராமம்

Posted On: 15 JUL 2022 4:47PM by PIB Chennai

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள  பாப்பாங்குழி கிராமப் பஞ்சாயத்து, சமுதாய உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைந்த முயற்சி காரணமாக, கழிவுநீர் மேலாண்மை திட்டத்தை  வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வீடு வாரியாகவும், சமுதாய ரீதியாகவும் கழிவுநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு, முதலில் வடிகட்டப்படும் சாக்கடை கழிவுநீர் பின்னர் சுத்திகரிக்கப்படுகிறது.  இதன் மூலம் அந்த கிராமத்தில் தினந்தோறும் 42,000 லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. தூய்மை இந்தியா இயக்கம் - கிராமப்புற திட்டத்தின் 2-ம் கட்டத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக கழிவுநீர் மேலாண்மை இயக்கம் மேற்கொள்ளப்படுகிறது.

பாப்பாங்குழி கிராமத்தில் தினந்தோறும் பயன்படுத்தப்படும் 60,000 லிட்டர் தண்ணீரில் 70 சதவீதம்,  பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் மற்றும் குளியலறையிலிருந்து கழிவு நீராக வெளியேறுகிறது.

சமுதாய தலைமை பண்பு: இந்த கிராமத்தில் கழிவுநீர் மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதில், தூய்மைப்பணியாளரான திருமதி ஏ சரளாதேவி முக்கிய பங்கு வகித்துள்ளார். கழிவுநீரில் என்னென்ன கழிவுகள் இடம் பெற்றுள்ளன, அதை முறையற்ற வகையில் கையாள்வதால் ஏற்படும் நச்சு பாதிப்பு குறித்தும், கிராம மக்கள் அறிந்து கொள்ள செய்தார். அதன் பிறகு பாப்பாங்குழி ஊராட்சித் தலைவர் திரு கணேசன் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர், கழிவுநீர் மேலாண்மையின் அவசியத்தை எடுத்துரைத்து, இதற்கான சுத்திகரிப்பு அமைப்பை ஏற்படுத்த தேவையான நிதியை நவம்பர் 2021-ல் ஒதுக்கீடு செய்தனர். கழிவுநீர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு பொது மக்களை ஊக்குவித்தனர். அதன்படி, வீட்டுக்கழிவுகளை, கழிவுநீர் வாய்க்காலில் கொட்டாமல் இருப்பதை உறுதி செய்ததுடன், கழிவுநீர் தேங்குவதை தடுக்க வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதோடு, மழைநீர் வடிகால்களும் அடிக்கடி சுத்தப்படுத்தப்படுகின்றன.  இதன் மூலம் கழிவுநீர் மேலாண்மையில் பாப்பாங்குழி கிராமம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1841784

****



(Release ID: 1841831) Visitor Counter : 242


Read this release in: English , Urdu , Hindi , Telugu