மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
22-வது தேசிய மீன் விவசாயிகள் தினம் கொண்டாட்டம்
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர்.சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் நிகழ்ச்சியில் உரையாற்றினர்
Posted On:
10 JUL 2022 7:40PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்திற்குட்பட்ட, தேசிய மீன் வளர்ச்சி வாரியம் சார்பில், 22வது தேசிய மீன் விவசாயிகள் தினம், ஹைதராபாத்தில் உள்ள தேசிய மீன் வளர்ச்சி வாரியத்தில், கலப்பு முறையில் கொண்டாடப்பட்டது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர்.சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் ஆகியோர், நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பங்கேற்று சிறப்பித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மீன் விவசாயிகள், மீன் வளர்ப்புத் தொழில்முனைவோர் & மீனவர்கள், தொழில் வல்லுனர்கள், அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின்போது, உள்நாட்டு மீன் நுகர்வு மற்றும் நீடித்த உற்பத்தி குறித்த 4 பிரச்சார சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டன. “தாய்மைக்கு மீன்“ & “மீன் ஊட்டச்சத்துகள் மற்றும் அவற்றின் ஆரோக்கியப் பலன்கள்“ ஆகிய இரண்டு சுவரொட்டிகளை அமைச்சர் டாக்டர்.சஞ்சீவ் குமார் பல்யானும், “நீடித்த மீன்பிடி முறைகள்“ & “இந்தியாவின் மாநில மீன்பிடிப்பு“ ஆகிய 2 சுவரொட்டிகளை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகனும் வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய இணையமைச்சர் டாக்டர்.எல்.முருகன், மீன்வளர்ப்புத் தொழில் மூலம், மீன் உற்பத்தியில் நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என்றார். பல்வேறு ரக மீன்கள் மற்றும் மேம்பட்ட மீன் வகை வளர்ப்புக்கான குஞ்சுபொரிப்பு தொழில்நுட்பத்தை உருவாக்கிய விஞ்ஞானிகளின் பங்களிப்பு காரணமாகவே இந்த சாதனையை எட்ட முடிந்ததாக அவர் குறிப்பிட்டார். உள்ளூர் உற்பத்திப் பொருட்களை பிரதமர் ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, கோவிட் பெருந்தொற்று காலத்தில்கூட , நாட்டின் மீன் ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். நாட்டில் இதுவரை பயன்படுத்தப்படாத ஏராளமான மீன்வளம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் திறமையை உணர்ந்த மத்திய அரசு, நாட்டிலுள்ள மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள் பயனடையும் விதமாக, பிரதமரின் மீன்வளர்ப்புத் திட்டம், மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், கிசான் கடன் அட்டை போன்ற திட்டங்களைத் தொடங்கியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். கடற்பாசி சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக, மத்திய அரசு, தமிழ்நாட்டில் கடற்பாசி பூங்கா-விற்கு ஒப்புதல் அளித்திருப்பதுடன், நாடு முழுவதுமுள்ள மீன்பிடித் துறைமுகங்களும் நவீனப்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் டாக்டர்.சஞ்சீவ் கமார் பல்யான், நாட்டிலுள்ள மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகள் பலனடையும் வகையில், ரூ.20,050 கோடி செலவில் முன்னோடித் திட்டமான பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். விவசாயிகள், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, மீன் உற்பத்தியைப் பெருக்குவதோடு, தங்களது சமூக-பொருளாதா நிலையையும் மேம்படுத்திக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். நுகர்வோரிடையே, மீன் பற்றிய சுகாதாரப் பலன்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1840610
*******
(Release ID: 1840633)
Visitor Counter : 248