சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டெல்லி-மும்பை விரைவுச்சாலை மற்றும் பல புதிய சாலைத்திட்டங்கள் மகாராஷ்டிராவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் - நிதின் கட்கரி

Posted On: 08 JUL 2022 4:35PM by PIB Chennai

அமைக்கப்பட்டு வரும் தில்லி-மும்பை விரைவுச்சாலை, நாக்பூர்-மும்பை சம்ரித்தி மஹாமார்க் மற்றும் பல புதிய சாலைத் திட்டங்கள் மகாராஷ்டிராவில் மேலும் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி கூறினார். மும்பையில் இன்று சிஐஐ ஏற்பாடு செய்திருந்த இரண்டாவது 'சங்கல்ப் சே சித்தி - புதிய இந்தியா, புதிய தீர்வு மாநாட்டில்' பேசிய திரு கட்கரி, மும்பையை தில்லி, புனே மற்றும் பெங்களூருவுடன் இணைக்கும் சிறந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தயாராகி வருவதாகக் கூறினார்.

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான தில்லி - மும்பை விரைவுச் சாலையின் 70% பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், இது தேசிய தலைநகர் மற்றும் வர்த்தக தலைநகர் இடையேயான பயண நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கும் என்றும் திரு கட்கரி தெரிவித்தார். ரூ.50,000 கோடி திட்ட மதிப்பீட்டில் மும்பையில் உள்ள நாரிமன் பாயிண்டிலிருந்து தில்லிக்கு கடலோர சாலை மற்றும் வசாய் - விரார் கடல் இணைப்பு கட்டமைப்பு மூலம் தடையற்ற இணைப்பை ஏற்படுத்துவது எனது கனவு" என்றார். இந்தத் திட்டத்திற்குத் தேவையான இரும்பு மற்றும் சிமென்ட் மீதான மாநில ஜிஎஸ்டியை ரத்து செய்யுமாறு மகாராஷ்டிர அரசிடம் மத்திய அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

மும்பை - புனே விரைவுச்சாலை, புனே உள்வட்டச்சாலை ஆகியவற்றின் வெஸ்டர்லி புறவழிச்சாலை வழியாக மும்பையிலிருந்து பெங்களூருக்கு நேரடி சாலை இணைப்பை உருவாக்குவதற்கான திட்டங்களையும் கட்கரி அறிவித்தார். சாலை சீரமைப்பு திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் அவர் கூறினார். புதிய புனே - அவுரங்காபாத் சாலை சீரமைப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை வெறும் 2 மணிநேரமாக குறைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்து கொண்ட மகாராஷ்டிர முதல்வர் திரு ஏக்நாத் ஷிண்டேவிடம், நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளுமாறு திரு கட்கரி கேட்டுக் கொண்டார். அவரும் நவி மும்பையைப் போல, புனே மற்றும் அவுரங்காபாத் அருகே புதிய சாலைகளில் புதிய நகரங்களை உருவாக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். சூரத் - நாசிக் - அகமதுநகர் - சோலாப்பூரை இணைக்கும் புதிய சாலை சீரமைப்பு வட இந்தியாவில் இருந்து வரும் தெற்குப் போக்குவரத்தில் 50% திசைதிருப்பப்படும் என்றும், இதன் விளைவாக தானே, மும்பை மற்றும் புனேவில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறையும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதில் மகாராஷ்டிராவின் பங்களிப்பு

பொருளாதார வளர்ச்சியில் உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திரு நிதின் கட்கரி, 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் இந்தியாவின் கனவை மகாராஷ்டிராவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு இல்லாமல் நனவாக்க முடியாது என்றார். "மகாராஷ்டிரா இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இயந்திரம் மற்றும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவை நனவாக்க, மாநிலம் விவசாயம், தொழில் மற்றும் சேவைகள் என அனைத்து துறைகளிலும் முக்கிய பங்களிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

எதிர்காலத்தில் எத்தனாலை விருப்பமான எரிபொருளாகப் பயன்படுத்துங்கள்

ஸ்ரீ கட்கரி, “சர்க்கரை தொழில் மகாராஷ்டிராவின் செழுமைக்கு பங்களித்துள்ளது. உபரி சர்க்கரை பிரச்சினைக்கு தீர்வு காண, இப்போது பெட்ரோலுக்கு இணையான கலோரிஃபிக் மதிப்புடன் எத்தனாலை எரிபொருளாக ஊக்குவிக்கிறோம். பெட்ரோலில் இருந்து பெறும் சராசரி அளவை எத்தனாலில் இருந்து பெற முடியும் என்று பரிதாபாத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் சான்றளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

குறிப்பாக ஃப்ளெக்ஸ் எஞ்சின் வாகனங்கள் அடுத்த மாதம் முதல் கிடைக்கத் தொடங்கும் என்பதால், எதிர்காலத்தில் எத்தனாலை விருப்பமான எரிபொருளாகப் பயன்படுத்துமாறு மக்களை வலியுறுத்தினார். பெட்ரோலுடன் ஒப்பிடும் போது,  எத்தனால் லிட்டர் ரூ.64 –க்கு கிடைக்கும்,  ஒரு சாதாரண மனிதனுக்கு மிகவும் செலவு குறைந்த எரிபொருளாக அது இருக்கும் என்று அவர் கூறினார்.

எத்தனால், மெத்தனால், பயோ-டீசல், பயோ சிஎன்ஜி, பயோ எல்என்ஜி மற்றும் கிரீன் ஹைட்ரஜன் போன்ற மாற்று எரிபொருட்களை ஊக்குவிப்பதன் மூலம் பெட்ரோல் பயன்பாட்டைக் குறைப்பதில் மகாராஷ்டிரா முன்னோடி மாநிலமாக முடியும் என்றார் அமைச்சர். மும்பை மற்றும் புனேவில் பொதுப் போக்குவரத்திற்காக மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதையும் திரு கட்கரி பாராட்டினார், மேலும் நகர்ப்புற போக்குவரத்துக்கு செலவு குறைந்த டிராலி பேருந்துகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என அவர் பரிந்துரைத்தார்.

***************(Release ID: 1840179) Visitor Counter : 90


Read this release in: English , Urdu , Hindi , Marathi