பாதுகாப்பு அமைச்சகம்

தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை டிஆர்டிஓ முதல்முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது

Posted On: 01 JUL 2022 2:31PM by PIB Chennai

தானியங்கி பறக்கும் பிரிவு தொழில்நுட்ப செயல்விளக்க விமானத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள வான்சோதனை தளத்தில் ஜூலை 1,2022 அன்று  முதல்முறையாக வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கக்கூடிய இந்த விமானத்தின், புறப்பாடு, பறக்கும் வழி, தரையிறங்குதல் உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளும் துல்லியமாக அமைந்தது. வருங்காலத்தில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்களுக்கான முக்கிய தொழில்நுட்பத்தை  பயன்படுத்துவதில் இந்த சோதனை ஓட்டம் மாபெரும் சாதனை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  நீடித்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களில் தற்சார்பு அடைவதற்கும் இது முக்கியம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆளில்லா விமானம் பெங்களூருவில் உள்ள டிஆர்டிஓவின் பிரதான ஆராய்ச்சி ஆய்வகமான, வான்மேம்பாட்டு பிரிவால் வடிவமைத்து உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  சிறிய ரக டர்போ ஃபேன் இயந்திரத்தால்  இந்த விமானம் இயக்கப்படுகிறது.  மேலும் இந்த விமான தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட அனைத்து வான் கட்டுப்பாட்டு சாதனங்களும் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும்.

டிஆர்டிஓ வி்ஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தானியங்கி விமான தயாரிப்பில் இது ஒரு பெரும் சாதனை என்றும், முக்கியமான ராணுவ சாதனம் தயாரிப்பில் ‘தற்சார்பு இந்தியாவுக்கு’ வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் ஜி சதீஸ் ரெட்டியும், இந்த விமானத்தின் வடிவமைப்பு, தயாரிப்பு மற்றும் பரிசோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் குழுவின் முயற்சியை பாராட்டியுள்ளார்.

***************

 (Release ID: 1838559) Visitor Counter : 357