சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தொற்று அதிகரிக்கும் மாநிலங்கள் விழிப்புடன், எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது

Posted On: 28 JUN 2022 6:12PM by PIB Chennai

கடந்த சில வாரங்களாக கொவிட் தொற்று அதிகரிக்கும் மாநிலங்கள் விழிப்புடனும் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கொவிட் தொற்று அதிகரித்து வரும் 14 மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை  செயலாளர்  திரு ராஜேஷ்  பூஷன் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆய்வு செய்தார்.   இக்கூட்டத்தில் பங்கேற்ற நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி கே பால், இம்மாதம் 9ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட திருத்தியமைக்கப்பட்ட கண்காணிப்பு உத்தியை கடைபிடித்து கொவிட் தொற்றை தவிர்க்குமாறு வலியுறுத்தினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொவிட் நோயாளிகளின் மருத்துவ தகவல்களை தீவிரமாக கண்காணிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. கொவிட் இரண்டாவது தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகளில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

தொடர் பரிசோதனை மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, பல்வேறு மாநிலங்களில் பண்டிகைகள் கொண்டாடப்படும் நிலையில், கொவிட் தடுப்பு வழிமுறைகளை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் அசாம், தில்லி, கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, மேகாலயா, மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குனர்கள் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837648

 

***************



(Release ID: 1837701) Visitor Counter : 186