சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
சுகாதார உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு ரூ. 404 கோடி ஒதுக்கீடு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
Posted On:
26 JUN 2022 4:09PM by PIB Chennai
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் தானியங்கி அறுவைச் சிகிச்சை மையத்தை அமைச்சர் இன்று பார்வையிட்டார். பின்னர் சென்னை ஆவடியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கான சுகாதார மையத்திற்கு அமைச்சர் மாண்டவியா காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, தேசிய சுகாதார இயக்கத்தின் செயல்பாடு குறித்து மாநில மேலாண் இயக்குநர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அதிகாரிகள், மத்திய-மாநில சுகாதாரத்துறை, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு அரசு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ததாகவும், இந்த அரசு மருத்துவமனையில் நவீன தொழில்நுட்பமான மேம்பட்ட ரோபோடிக் அறுவை சிகிச்சைக்கான, 2 அறுவை சிகிச்சை கன்சோல்களைக் கொண்ட ஒரே மையமாக இது செயல்படுவதாக கூறினார்.
பேறுகால இறப்பு விகிதம், சிசு இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவதில், பிற மாநிலங்களுக்கு முன்பாகவே இலக்கை அடைந்ததற்காக இந்த தருணத்தில் தமிழகத்திற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 75 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
தமிழகத்தில் செலுத்தப்பட்டுள்ள 11 கோடியே 26 லட்சம் கொவிட் தடுப்பூசி டோஸ்களில் 94% முதல் டோஸ், 82% இரண்டாவது டோஸ். இது பாராட்டப்பட வேண்டிய சாதனை. காச நோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தத்தெடுக்கவும், அவர்களது நல்வாழ்வை உறுதி செய்வதற்காகவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, பரிசோதனை மற்றும் சரியான சிகிச்சை அளிப்பதற்காகவும் நிக்ஷய் மித்ர திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
2025-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் காச நோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், பொதுநோக்கம் உள்ள எந்த ஒரு நபர், அரசு சாராத அல்லது அரசு சார்ந்த, தனியார் மற்றும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த தனிநபர்கள் காசநோயாளிகளைத் தத்தெடுக்கலாம். பாக்டீரியா நுண்கிருமி பாதிப்புள்ள ஒருவருக்கு வறுமை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டால் காசநோய் ஏற்படுவதற்கும், நோயின் தீவிரத்தன்மை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. இதனால் நோயாளிகள் குணமடையும் வேகம் குறைவதோடு, மருந்துகளால் பக்க விளைவுகள் அதிகரித்து, மரணமும் நிகழக்கூடும்.
தமிழகத்தில் 50,000 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. தமிழகத்தில் நிக்ஷய் திட்டத்திற்கு வெறும் 5% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்து, 35% இன்னும் இசைவு தெரிவிக்காததால், இத்திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். கொவிட் தொற்றைப் போல நாட்டின் முன்னேற்றத்திற்காக, உங்களது ஆதரவோடு மட்டும்தான் நாம் ஒன்றிணைந்து இந்த இடர்பாடுகளைக் களையமுடியும். தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மலேரியா பாதிப்பு இல்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் யானைக்கால் நோயை தமிழகம் முற்றிலும் ஒழித்துள்ளது. இது ஊக்கமளிக்கும் விஷயமாக இருந்தபோதும், விழிப்புடன் இருந்து, மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். பூச்சிகளால் பரவும் நோயால் ஏழைகள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், அவர்களது துயரமும் அதிகரிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை, தொலைநோக்குப் பார்வை கொண்டது மட்டுமல்ல, அனுதாபம் நிறைந்ததும் கூட. 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டிலிருந்து மலேரியாவை முற்றிலும் ஒழிக்க உறுதிபூண்டுள்ளோம். பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின் கீழ் 'ஒரே தேசம் ஒரே டயாலிசிஸ்’ திட்டத்தை பிரதமர் மோடி விரைவில் தொடங்கி வைப்பார். அதன்மூலம், டயாலிசிஸ் தேவை ஏற்படும் நோயாளி, நாட்டின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் அந்த வசதியைப் பெற முடியும்.
குஜராத்தைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கு டயாலிசிஸ் தேவைப்பட்டால், தமிழகத்திலோ அல்லது நாட்டின் எந்த ஒரு பகுதியிலோ அவர் சுலபமாக அதனைப் பெற முடியும். ஆயுஷ்மான் பாரத்- சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் திட்டத்தின் கீழ் 2022 டிசம்பருக்குள் 9135 சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் என்ற நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு எதிராக, மாநிலத்தில் 7052 மையங்கள் (ஜூன் 2022 வரை) செயல்படுகின்றன. இந்த மையங்களில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பொதுவான புற்றுநோய் உள்ளிட்டவற்றிற்கு இதுவரை (மார்ச் 2022 வரை) 542.07 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சுகாதாரத்திற்காக தமிழகத்திற்கு சுமார் ரூ. 2600 கோடியையும், பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் சுகாதார உள்கட்டமைப்பிற்காக ரூ. 404 கோடியையும் மோடி அரசு ஒதுக்கியுள்ளது. சுகாதார இயக்கங்களில் பணிபுரியும் அனைத்து கொவிட் போராளிகளுக்கும், குறிப்பாக பெண்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
****
(Release ID: 1837114)
Visitor Counter : 300