சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

வளர்ச்சியை விரும்பும் நாடுகள் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

Posted On: 25 JUN 2022 5:01PM by PIB Chennai

புதுச்சேரியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் நோய்க்கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில், பூச்சியியல் மருத்துவ பயிற்சிக்கான சர்வதேச செயல்திறன் மைய அடிக்கல் நாட்டு விழா இன்று (25.6.2022) நடைபெற்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் திரு. . ரங்கசாமி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தலைமை இயக்குநர் திரு. பல்ராம் பார்கவ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா,

மேம்பாடு மற்றும் வளர்ச்சிப்பாதையில் செல்ல விரும்பும் எந்த நாடும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மேலும், 200 கோடி டோஸ் அளவுக்கு தடுப்பூசி போடும்  திறன் இந்தியாவைத்தவிர வேறு எந்த நாட்டிற்கும் இல்லை என்று கூறிய அமைச்சர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசி தயாரித்த விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.

தொடர்ந்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பொது சுகாதாரத்திற்கான  சர்வதேச மையத்தையும் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

இந்த நாள் ஜிப்மருக்கு மட்டும் அல்ல, உலகத்திற்கே முக்கியமான நாள். இந்த தனித்துவமான மையத்தை அமைக்க மத்திய அரசு 65 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, வலிமையான பொது சுகாதார கட்டமைப்புகள் மூலம் பெருந்தொற்றில் இருந்து நாட்டுமக்களை காப்பாற்றியதாகவும் டாக்டர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

முன்னதாக  புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள மாத்ரிமந்திர் சென்ற மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, அங்குள்ள அரவிந்தரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு யோகா பயிற்சி மேற்கொண்டதுடன், சைக்கிள் ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டார்.

****



(Release ID: 1836962) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi , Manipuri