நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கோவாவில் தாரோஹர் எனும் தேசிய சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி அருங்காட்சியகத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டுக்கு அர்ப்பணித்தார்

Posted On: 11 JUN 2022 4:51PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் ஜூன் 6 முதல் 12 வரை கொண்டாடப்படும் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழா சிறப்பு வாரத்தின்  ஒரு பகுதியாக, கோவாவில் “தரோஹர்” எனும்  தேசிய சுங்க மற்றும் ஜிஎஸ்டி அருங்காட்சியகத்தை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி.  நிர்மலா சீதாராமன் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பல நூற்றாண்டு பழமையான பாரம்பரிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டிருந்த கலை நுட்பம் கொண்ட ஒற்றைப்  பாறையிலிருந்து தங்க மணலை  அகற்றி தனித்துவமான முறையில் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. கோவாவில் போர்த்துகீசிய ஆட்சியின் போது அல்ஃபண்டேகா என்று அழைக்கப்பட்ட இரண்டு மாடி 'நீலக் கட்டிடம்' பனாஜியில் உள்ள மண்டோவி ஆற்றின் கரையில் 400 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது.

நிதித்துறை இணையமைச்சர் திரு. பங்கஜ் சவுத்ரி, மற்றும்  கோவா அரசின் போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் மவ்வின் கோடின்ஹோ இந்த அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

நாட்டில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்களில் ஒன்றான தாரோஹர்  இந்திய சுங்கத்துறையினரால் கைப்பற்றப்பட்ட நாட்டின் பாரம்பரிய,கலைப்பொருட்களைக்  கொண்டிருப்பது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதார முனைகள், தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பில் சுங்கத் துறையினரின் பல்வேறு பணிகளை சித்தரிக்கும் வகையிலும்  உள்ளது.

'தரோஹர்' 8 கூடங்களைக் கொண்டுள்ளது: அறிமுகக் கூடம் , வரிவிதிப்பின் வரலாற்றுக் கூடம், நமது பொருளாதார முனைகளின் பாதுகாவலர்கள் கூடம், நமது கலை மற்றும் பாரம்பரியத்தின் பாதுகாவலர்கள் கூடம், தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பாதுகாவலர்கள் கூடம், நமது சமூக நல்வாழ்வின் பாதுகாவலர்கள் கூடம், மறைமுக வரிகளின் பயணம் -உப்பு வரி முதல்  ஜிஎஸ்டிவரை மற்றும் ஜிஎஸ்டி கூடம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செயதிக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833153

*********


(Release ID: 1833188) Visitor Counter : 236