குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இந்திய வம்சா வழியினரின் வெற்றி என்பது இந்தியா மற்றும் இந்தியர்கள் பற்றிய உலகின் கண்ணோட்டத்தை மாற்றியுள்ளது: குடியரசு துணைத்தலைவர்

Posted On: 07 JUN 2022 4:13PM by PIB Chennai

காபோன், செனகல், கத்தார் நாடுகளில் வெற்றிகரமான 9 நாள் பயணத்தை நிறைவு செய்த குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு இன்று மாலை இந்தியா திரும்பினார். காபோன், செனகல் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த உயர்நிலை தலைவரின் முதலாவது பயணம் இதுவாகும். அதேபோல் இந்திய குடியரசு துணைத்தலைவர் கத்தார் நாட்டிற்கு மேற்கொண்ட முதலாவது பயணம் இதுவாகும். இந்த நாடுகளின் தலைநகரங்களான லிப்ரேவில்லே, டாக்கர், தோகா ஆகியவற்றில் திரு நாயுடுவை கவுரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளில்  அவர் அந்நாடுகளின் வணிகத்துறையினர் மற்றும் இந்திய சமூகத்தினருடன்  கலந்துரையாடினார்.

கத்தாரின் தோகாவில் நேற்று இந்திய வம்சாவழி சமூகத்தினரிடையே குடியரசு துணைத்தலைவர் உரையாற்றினார். இவர்களின் சாதனைகளுக்காக பாராட்டு தெரிவித்த  திரு நாயுடு, இந்தப் பயணத்தில் கத்தாரின் தலைவர்களை சந்தித்தபோது இந்த நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய சமூகத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பற்றி மிகுந்த நேர்மறையான கருத்துக்களை தெரிவித்ததாக கூறினார். இரு நாடுகளுக்கிடையே இணைப்பு பாலமாக கத்தாரில் 7.80 லட்சம் இந்திய சமூகத்தினர்  வசித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத உயர் அளவாக இந்தியா-கத்தார் இடையே 15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இரு தரப்பு வர்த்தகம் நடந்ததாக அவர் கூறினார். கத்தாரில் அடிப்படை கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில் 50 நிறுவனங்கள் இந்தியர்களுக்கு சொந்தமாக உள்ளன என்றும், இந்தியா- கத்தார் பொருளாதார பங்களிப்பு முறையில் 15 ஆயிரம் நிறுவனங்கள் கூட்டு முயற்சியில் நடைபெறுகின்றன என்றும் திரு நாயுடு தெரிவித்தார். 

இந்தியாவின் வளர்ச்சியில் பங்கேற்குமாறு இந்திய சமூகத்தினருக்கு அழைப்பு விடுத்த அவர், “ஜென்மபூமியுடன் தொடர்பை பராமரிக்குமாறு” கேட்டுக்கொண்டார். வெளிநாட்டுக்கு சென்றுள்ள இளைஞர்கள் கல்வி கற்று, வெளிநாடுகளில் சம்பாதித்து தாய்நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வெற்றி என்பது இந்தியா மற்றும் இந்தியர்கள் பற்றிய உலகின் கண்ணோட்டத்தில்  வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டு, இந்திய வம்சா வழியினரின் முயற்சிகளை பாராட்டினார்.

குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடுவுடன் மத்திய  சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு சுசில் குமார் மோடி, திரு விஜய்பால் சிங் தோமர், திரு பி ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

***************



(Release ID: 1831897) Visitor Counter : 185