மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

பரம் பொருள் சூப்பர் கம்ப்யூட்டர்: தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனின் கீழ் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் முன்முயற்சி

Posted On: 25 MAY 2022 1:11PM by PIB Chennai

இந்திய அரசின் தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனில் (என்.எஸ்.எம்) திருச்சிராப்பள்ளியின் தேசிய தொழில்நுட்பக் கழகம் இணைந்துள்ளது. ‘பரம் பொருள்' எனப் பெயரிடப்பட்டுள்ள மையத்தை, இந்தக் கழகத்தின் இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா முன்னிலையில், நிர்வாகக் குழு தலைவர் திரு பாஸ்கர் பட் திறந்து வைத்தார். திருமதி சுனிதா வர்மா, குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர், என்.எஸ்.எம்,, டாக்டர் நம்ரதா பாதக் , விஞ்ஞானி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, திரு ஈ. மகேஷ், தலைமை இயக்குநர், சி-டாக், திரு. நவின் குமார், விஞ்ஞானி டி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், திரு. எஸ்.ஏ. குமார், ஆலோசகர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டாக்டர் நாகபூபதி மோகன், விஞ்ஞானி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, டாக்டர் ஹேமந்த் தர்பாரி, திட்ட இயக்குநர், என்.எஸ்.எம், திரு சஞ்சய் வந்தேகர், மூத்த இயக்குநர், சி-டாக், புனே,  உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர். பரம் பொருள் சூப்பர் கம்ப்யூட்டர் மையம் பொது மக்கள் பயன்பாட்டிற்காகத் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய திரு பாஸ்கர் பட், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சேவையாற்றுவதில் இந்த வசதி ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார். தேசிய கல்வி கொள்கை 2020-இன் அறிவுறுத்தலின்படி இந்த மையத்தின் மூலம் இப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் பெருமளவு பயனடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

பரம் பொருள் மையத்தின் திறப்பு விழாவில் தனது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் டாக்டர் ஜி. அகிலா  வெளிப்படுத்தினார். சூப்பர் கம்ப்யூட்டர் வசதி, ஆராய்ச்சி வெளியீடு மற்றும் சமூகத் திட்டங்களான சுகாதாரம், விவசாயம், வானிலை, நிதிச் சேவைகள், சமூக ஊடகங்கள் போன்ற துறைகளில் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்றும், நிறுவனத்தின் 17 துறைகளின்  திட்டங்களை மேம்படுத்தும் என்றும் கூறினார். தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் மிஷனில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, சூப்பர் கம்ப்யூட்டிங் வசதி அருகிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

70:30 என்ற விகிதத்தில் சி.பி.யூ மற்றும் ஜி.பி.யூ-வை உள்ளடக்கிய 650 டி.எஃப் சூப்பர் கம்ப்யூட்டர், புனேவிலுள்ள சி-டாக்கால், ரூ. 4 கோடி கூடுதல் செலவில், நிறுவப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், ஆழ்ந்த கற்றல் உள்ளிட்ட சமூக திட்டங்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், திருச்சிராப்பள்ளியின் தேசிய தொழில்நுட்பக் கழகம், சரியான நேரத்தில் சூப்பர் கம்ப்யூட்டரை நிறுவுகிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மற்றும் நிதி உதவியுடன் கூடிய ஆராய்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்காக உயர்நிலை கணினி சம்பந்தப்பட்ட திட்டங்களில் பணிபுரியும் ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.

உயர் செயல்திறன் கொண்ட கணினித் திறன்களைக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிகாரம் அளிப்பதே தேசிய கம்ப்யூட்டிங் மிஷனின் முக்கிய நோக்காகும்.

என்.எஸ்.எம் உள்கட்டமைப்புக் குழுவிடம் தேசிய தொழில்நுட்பக் கழகம் சமர்ப்பித்த முன்மொழிவின் அடிப்படையில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை ஆகியவற்றால் ரூ.19 கோடி மதிப்பிலான சூப்பர் கம்ப்யூட்டர்,  திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்திற்கு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

****




(Release ID: 1828185) Visitor Counter : 514