அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான ஒற்றை தேசிய இணையப்பக்கத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்

Posted On: 21 MAY 2022 3:48PM by PIB Chennai

"ஒரு தேசம் , ஒரு இணையப் பக்கம்" என்ற உணர்வை மனதில் கொண்டு மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சக இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் அமைச்சக இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரதமர் அலுவலகம், ஊழியர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள் அமைச்சக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதிய தொழில்களுக்கான ஒற்றை தேசிய இணையப் பக்கத்தை இன்று தொடங்கிவைத்தார்.

"பயோ ஆர்ஆர்ஏபி" (BioRRAP) என்ற இந்த இணையப்பக்கம் உயிரியல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைக்கு அனைத்து ஒழுங்குமுறை அனுமதியையும் வழங்கும்.
இது அறிவியலை எளிதாகக் கொண்டு செல்லுதல், வணிகத்தை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு மிகப்பெரும் நிவாரணத்தை அளிக்கும்.

இந்த இணைய பக்கத்தை தொடங்கி வைத்தபின் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய உயிரி உற்பத்திப்பொருள் முனையமாக மாறுவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது என்றும் 2025 வாக்கில் உலகின் ஐந்து முதன்மை நாடுகளில் ஒன்றாக இது இடம் பெற்றிருக்கும் என்றும் கூறினார். இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்குக் கல்வி மற்றும் வாழ்வாதாரத் துறையாக உயிரித் தொழில்நுட்பம் வெகு வேகமாக வளர்ந்து வருகிறது என்று அமைச்சர் கூறினார். நாட்டில் தற்போது 2700 அறிவியல் தொழில்நுட்ப புதிய தொழில்கள் இருப்பதாகவும் 2500 உயிரி இயல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த இணையப் பக்கத்தைத் தொடங்கிய தற்காக உயிரித் தொழில்நுட்பத் துறைக்குப் பாராட்டு தெரிவித்த அமைச்சர், இதன் நடைமுறைகளை எளிதாகவும் பயன்பாட்டுக்குரியதாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகளை இந்தத் துறை காண வேண்டுமென்று யோசனை தெரிவித்தார்.

ஒழுங்குமுறை அனுமதி தேவைப்படும் ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் பயன்படுத்தத்தக்க வகையில் இணையதள நடைமுறையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது என்றும் இதற்கு தனித்துவ அடையாளக் குறியீடாக 'பயோஆர்ஆர்ஏபிஐடி" என்பது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையப்பக்கம் ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஒழுங்குமுறை அனுமதிக்கான விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை காண்பதற்கான நுழைவாயிலாக இருக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர் அல்லது அமைப்பு உழைப்பால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிப் பணிகள் குறித்த அனைத்துப் பூர்வாங்கத் தகவல்களையும் இதில் காண முடியும் என்று அவர் கூறினார்.

இந்த இணையப்பக்கம் மூலம், அனுமதி பெறுவதற்கான உருகும் ஒழுங்குமுறை, பதிவு ஆகியவை குறித்த விதிமுறைகளை குறுகியகாலத் திரைப்படமாக எடுத்து அவற்றைப் பிரபலப்படுத்த வேண்டும் என்று உயிரி தொழில்நுட்ப துறையின் அலுவலர்களுக்கு டாக்டர் ஜிதேந்திர சிங் ஆலோசனை வழங்கினார்.

உலகளாவிய உயிரித் தொழில்நுட்ப சந்தையில் 2017இல் வெறும் 3% ஆக இருந்த இந்திய உயிரி தொழில் நுட்ப தொழில் துறையின் பங்களிப்பு 2025 வாக்கில் 19 சதவீத அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார். தேசிய உள்நாட்டு மொத்த உற்பத்திக்கு உயிரி பொருளாதாரத்தின் பங்களிப்பு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது என்று குறிப்பிட்ட அவர் இது 2017 ல் 5.7 சதவீதமாக இருந்த இது 2020இல் 2.7 சதவீதமாக உயர்ந்தது என்றார் மேலும் சுதந்திரத்தின் நூறாவது ஆண்டான 2047ல் உயிரி பொருளாதாரத்தின் பயணம் புதிய உச்சங்களைத் தொடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1827195

 

**************



(Release ID: 1827209) Visitor Counter : 640