பிரதமர் அலுவலகம்

டென்மார்க்கில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தி அறிக்கை

Posted On: 03 MAY 2022 7:11PM by PIB Chennai

மதிப்பிற்குரிய
டென்மார்க் நாட்டின் பிரதமர்,
பிரதிநிதி குழு உறுப்பினர்கள்,
ஊடக நண்பர்கள் அனைவருக்கும்
மாலை வணக்கம்,
எனக்கும் எனது பிரதிநிதி குழுவினருக்கும் டென்மார்க்கில் வழங்கப்பட்ட அருமையான வரவேற்பிற்கு மதிப்பிற்குரிய பிரதமருக்கும் உங்களது குழுவினருக்கும் மிக்க நன்றி. உங்களது அழகிய நாட்டிற்கு நான் வருவது இதுதான் முதல் முறை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவிற்கு உங்களை வரவேற்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன். இந்த இரு பயணங்களினால் நமது உறவிற்கு நெருக்கத்தையும் ஆற்றலையும் சேர்க்க நம்மால் இயன்றுள்ளது. நம் இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், கருத்து சுதந்திரம் சட்ட விதிமுறைகளை பகிர்வது மட்டுமல்லாமல், நிறைவு தரும் ஆற்றல்களையும் பெற்றுள்ளோம்.

நண்பர்களே,
கடந்த அக்டோபர் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய- டென்மார்க் காணொலி உச்சிமாநாட்டின்போது பசுமை கேந்திர கூட்டுமுயற்சிக்கான அந்தஸ்தை எங்களது உறவிற்கு வழங்கினோம். இன்றைய விவாதங்களின் போது எங்கள் பசுமை கேந்திர கூட்டுமுயற்சியின் இணை செயல் திட்டம் பற்றி ஆய்வு செய்தோம்.

பல்வேறு துறைகளில், குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, சுழற்சி பொருளாதாரம் மற்றும் நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. காற்றாலை மின்சாரம், கப்பல் போக்குவரத்து, ஆலோசனை உணவு பதப்படுத்துதல் பொறியியல் போன்ற பல்வேறு துறைகளில் இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட டென்மார்க் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் ‘எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல்’ மற்றும் எங்களது பருண்மைப் பொருளாதார சீர்திருத்தங்களை அதிகரிப்பதனால் ஏற்படும் பலன்களை இது போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் பெறுகிறார்கள். இந்தியாவின் உள்கட்டமைப்பு துறை மற்றும் பசுமை தொழில் துறைகளில் முதலீடு செய்வதற்கான அபரிமிதமான வாய்ப்புகள் டென்மார்க் நிறுவனங்களுக்கும், டென்மார்க் ஓய்வூதிய நிதிகளுக்கும்  உள்ளன.

இந்திய- ஐரோப்பிய ஒன்றிய உறவுகள், இந்தோ- பசிபிக் உள்ளிட்ட பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இன்று நாங்கள் விவாதித்தோம். இந்திய- ஐரோப்பிய ஒன்றிய தடையில்லாத வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை வெகு விரைவில் நிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம். தடையில்லாத, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய, விதிகளின் அடிப்படையிலான இந்தோ- பசிபிக் பிராந்தியத்தை உறுதி செய்வதை நாங்கள் வலியுறுத்தினோம் . உக்ரேனில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்றும் அமைதி மற்றும் தூதரக வழியில் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுத்தோம். பருவநிலை துறையில் எங்களது ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசித்தோம். கிளாஸ்கோ காப்-26 முன்மொழியப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது. ஆர்க்டிக் பகுதிகளில் ஒத்துழைப்புக்கான கூடுதல் வாய்ப்புகளை ஆராயவும் நாங்கள் முடிவு செய்தோம்.

மதிப்பிற்குரியோரே,
உங்களது தலைமையின் கீழ் இந்தியா மற்றும் டென்மார்க் இடையேயான உறவு புதிய உச்சத்தை அடையும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். நாளை நடைபெறவிருக்கும் 2-வது இந்தியா- நார்டிக் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருப்பதற்காகவும் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேரத்தை செலவழித்து இந்திய சமூகத்தினர் கலந்து கொண்ட நிகழ்ச்சியிலும் நீங்கள் பங்கேற்றதற்காக எனது நன்றிகள், இந்திய சமூகத்தினருக்கு நீங்கள் வழங்கும் அன்பின் சின்னமாக இது அமைந்துள்ளது.

நன்றி.

குறிப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் நிகழ்த்தியிருந்தார்.

*******



(Release ID: 1822590) Visitor Counter : 157