திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
திறன் மேம்பாட்டிற்கு புதுமையான வழிகளை ஆராயுமாறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு திரு தர்மேந்திர பிரதான் வலியுறுத்தல்
Posted On:
02 MAY 2022 5:36PM by PIB Chennai
அடுத்த ஓராண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு தொழில்பழகுனர் பயிற்சி அளிப்பது என்ற குறிக்கோளின்படி, மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்துறை, மத்திய அரசுக்கு உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு இன்று காணொலி பயிலரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அமைச்சகத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் முன் முயற்சிகள் குறித்தும், தொழில் பழகுனர்களை கூடுதலாக ஈடுபடுத்துவது குறித்தும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்த்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், இத்துறையின் இணையமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்டோர் பயிலரங்கில் பங்கேற்று, தேசிய நிர்மாணப் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் எந்த அளவு சிறப்பான பங்களிப்பை வழங்கலாம் என்பது குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
100-க்கும் மேற்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்கள், மனித வள மேலாளர்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வுத்திட்ட பொறுப்பாளர்கள் இப்பயிலரங்கில் கலந்துக் கொண்டு தொழில் பழகுனர் பயிற்சி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டதோடு, நாட்டில் தொழில்பழகுனர் திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்தும் விவாதித்தனர்.
இப்பயிலரங்கில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், தத்தமது பகுதியில் இயங்கி வரும் தொழில் பயிற்சி மையங்கள், ஜன் சிக்ஷான் சன்ஸ்தான்-களை தத்தெடுத்தல் உட்பட திறன் மேம்பாட்டுக்கான புதிய வழிகளை ஆராயுமாறு மத்திய பொதுத்துறை நிறுவனங்களை கேட்டுக்கொண்டார். இன்னும் அதிகளவில் தொழில் பழகுனர் பயிற்சி அளிப்பதோடு, திறன் இந்தியா இயக்கத்தின் கீழ், திறன் மேம்பாட்டை அதிகரிக்க சமூக பொறுப்புணர்வு நிதியை பயன்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். தேசிய கல்விக்கொள்கை 2020-ன் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கல்வி மற்றும் திறன் பயிற்சி இடையே வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட அமைச்சர், வலிமையான மற்றும் பலதொழில்திறனுடைய தொழிலாளர்களை உருவாக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
புதுமையான தேசிய பாடத்திட்ட கட்டமைப்புக்கான கருத்துக்களை தெரிவிக்குமாறும், பொதுத்துறை நிறுவனங்களை திரு தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822046
***************
(Release ID: 1822046)
(Release ID: 1822074)
Visitor Counter : 185