வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

இந்தியா- யுஏஇ விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தது

Posted On: 01 MAY 2022 2:49PM by PIB Chennai

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே, 2022 பிப்ரவரி மாதம் 18-ந்தேதி கையெழுத்தான வரலாற்றுச் சிறப்பு மிக்க விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) இன்று முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆபரணங்களைக் கொண்ட முதல் தொகுதி பொருட்களை மத்திய வர்த்தகத் துறை செயலர் திரு பிவிஆர் சுப்பிரமண்யம் கொடியசைத்து துவக்கிவைத்தார். புதுதில்லி புதிய சுங்கத்துறை அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்ததன் அடையாளமாக, இந்தியாவின் ரத்தினம் மற்றும் நகை பிரிவைச் சேர்ந்த மூன்று ஏற்றுமதியாளர்களின் சான்றிதழ்களை வர்த்தகத் துறை செயலர் வழங்கினார். இந்த ஒப்பந்தப்படி இந்த ஏற்றுமதி பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படமாட்டாது. இந்தப் பொருட்கள் இன்று துபாய் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அதிக அளவில் நகை, ஆபரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் மூலம், இந்தப் பொருட்களுக்கு வரிவிதிக்கப்படாது என்பதால், இந்தப் பிரிவு ஏற்றுமதியாளர்கள் பயனடைவர்.

நகை, வைரங்கள், ஜவுளி, தோல், காலணிகள், விளையாட்டு பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், மரப்பொருட்கள், வேளாண் பொருட்கள், பொறியியல் பொருட்கள், மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், வாகனங்கள் போன்ற தொழிலாளர் உழைப்பில் உருவாகும் பொருட்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ஒப்பந்தம் காரணமாக கட்டண விலக்கு கிடைக்கும் என்பதால், இந்தியா பெரும் பயன் அடையும் எனக் கூறப்படுகிறது.

சிஇபிஏ ஒப்பந்தம் இருதரப்பு பொருட்கள் வர்த்தக மொத்த மதிப்பு அடுத்த ஐந்து ஆண்டுகளில், 100 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக உயரும் என்றும், வர்த்தக சேவைகள் மதிப்பு 15 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1821785

***************



(Release ID: 1821807) Visitor Counter : 273